(எம்.மனோசித்ரா)

சட்ட விரோதமாக நாட்டிலிருந்து வெளியேற முற்பட்ட மேலும் 45 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்டையினரால் தெற்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த இரு மீன்படகுகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே குறித்த 45 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தெற்கு கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கஜபாகு கப்பலால் 26 நபர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த நீண்டநாள் மீன்பிடிப்படகொன்றும் , மேலும் 19 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த பிரிதொரு மீன்பிடிப்படகொன்றும் இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு படகுகள் ஊடாகவும் சட்ட விரோதமாக நாட்டிலிருந்து வெளியேற முற்பட்டவர்கள் கற்பிட்டி, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களுடன் அவர்கள் பயணித்த படகுகளும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.