(எம்.மனோசித்ரா)

களுத்துறை - பண்டாரகம , அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போயுள்ள சிறுமி தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பாணந்துரை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே, மேலதிக பொலிஸ் அத்தியட்சகர் உபாலி தலகல ஆகியோரின் ஆலோசனையின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.சி.ராஜபக்ஷ, மகளிர் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.வி.ஏ.ஹேமமாலினி, பொலிஸ் பரிசோதகர் மிஹிலார் அநுர, பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் சதுரிகா உள்ளிட்டோரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அட்டலுகம - எபிட்டமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய குறித்த சிறுமி அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு பொருட்கள் சிலவற்றைக் கொள்வனவு செய்வதற்காகச் சென்றுள்ளார். 

எனினும் கடைக்குச் சென்று ஒரு மணித்தியாலத்தின் பின்னரும் அவர் வீடு திரும்பாததையடுத்தே வீட்டார் அவரை தேடியுள்ளனர்.

சிறுமியின் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நீண்ட நேரம் அவரை தேடியும் கிடைக்காததையடுத்து பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர். 

சிறுமி கடைக்குச் சென்று திரும்பிய போது பதிவாகியுள்ள சி.சி.டி.வி. காணொளி கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.