Published by T. Saranya on 2022-05-28 11:25:16
அவுஸ்திரேலியாவில் குழந்தை ஒன்று பிறக்கும்போதே நிரந்தர புன்னகையோடு பிறந்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிறிஸ்டினா வெர்ச்சர் மற்றும் பிளேஸ் முச்சா தம்பதிக்கு அய்லா சும்மர் முச்சா என்ற பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை, வாய்ப்பகுதியின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளை பாதிக்கும் Bilateral Microstomia எனப்படும் மிக மிக அரிதான பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு குறித்த விவரம் அறிந்திராத குழந்தையின் பெற்றோர், இது தங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
2007-ம் ஆண்டு Cleft Palate-Craniofacial என்ற இதழில் வெளியிட்ட ஆய்வில் உலக அளவில் 14 பேர் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தனர்.

மிக மிக அரிதாக பாதிக்கும் இக்குறைப்பாடு, இந்தக் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே உருவானதாக அவுஸ்திரேலியாவில் உள்ள வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
'ஆனால் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் இக்குறைபாடு இருந்தது தெரியவில்லை. ஒரு தாயாக நான் என்ன தவறு செய்தேன்?வைத்தியர்கள், இது பெற்றோரால் ஏற்பட்ட தவறு அல்ல என்றனர்' என்கிறார் குழந்தையின் தாய்.
குழந்தையின் வாய் சீராகச் செயல்பட வைத்தியர்கள் அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களான டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்தக் குழந்தையின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நிரந்தரமான சிரிப்பை கொண்டிருக்கும் இந்தக் குழந்தையைப் பார்க்கும்போதே பலரின் முகதிலும் அது புன்னகையைக் கொண்டுவர, அனைவருக்கும் செல்லக் குழந்தையாக மாறியுள்ளது.