(என்.வீ.ஏ.)
ஜொஸ் பட்லர் குவித்த சதத்தின் உதவியுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரை 7 விக்கெட்களால் நொக் அவுட் செய்த ராஜஸ்தான் றோயல்ஸ், ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்தாட தகுதிபெற்றது.

அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (27) இரவு நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றிபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சகல துறைகளிலும் பிரகாசித்த ராஜஸ்தான் றோயல்ஸ் 11 பந்துகள் மீதிமிருக்க இலகுவாக வெற்றிபெற்றது.

ஜொஸ் பட்லர் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன், ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே பருவ காலத்தில் விராத் கோஹ்லிக்கு அடுத்ததாக 4 சதங்கள் குவித்த இரண்டாவது வீரரானார்.

விராத் கோஹ்லி 2016 ஐபிஎல் அத்தியாயத்தில் 4 சதங்களைக் குவித்திருந்தார்.
இரண்டாவது தகுதிகாண் போட்டியில் 158 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுபபெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

2008 அங்குரார்ப்பண ஐபிஎல் போட்டியில் சம்பியனான ராஜஸ்தான் றோயல்ஸ் 14 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஜொஸ் பட்லர் 60 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களைக் குவித்து ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றியை இலகுவாக்கினார்.

யஷஸ்வி ஜய்ஸ்வாலுடன் ஆரம்ப விக்கெட்டில் 31 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்த பட்லர், அணித் தலைவர் சஞ்சு செம்சனுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஜய்ஸ்வால் 21 ஓட்டங்களையும சஞ்ச செம்சன் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
தேவ்தத் படிக்கல் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
17ஆவது ஓவரில் களம் புகுந்த ஷிம்ரன் ஹெட்மயர், தனது சக வீரர் ஜொஸ் பட்லர் சதம் குவிப்பதை உறுதிசெய்யும் வகையில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸல்வுட் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 26 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய வனிந்து ஹசரங்க டி சில்வா இந்த வருட ஐபிஎல்லில் மொத்தமாக 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் பட்டியலில் வனிந்து ஹசரங்க முதலாம் இடத்திலுள்ளார். ராஜஸ்தான் றோயல்ஸ் வீரர் யுஸ்வேந்த்ர சஹாலும் 26 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது ஒவரில் சிக்ஸ் ஒன்றை விளாசி தனத கணக்கை ஆரம்பித்த விராத் கோஹ்லி 2ஆவது ஓவரில் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எவ்வாறாயினும் பவ் டு ப்ளெசிஸ் (25), ரஜாத் பட்டிதார் (4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 58) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து கொடுத்தனர்.
ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்ததால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரினால் கணிசமான மோத்த எண்ணிக்கையைப் பெற முடியாமல் போனது.

ஏனைய துடுப்பாட்ட விரர்களில் க்ளென் மெகஸ்வெல் (24), ஷாபாஸ் அஹ்மத் (12 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ப்ராசித் க்ரிஷ்ணா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஒபெட் மெக்கோய் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ராஜஸ்தான் றோயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (29) இரவு நடைபெறவுள்ளது.