(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பாதுகாப்புத் தரப்பினர்களின் கெடுபிடிகள் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மீன்பிடியின் போது பாதுகாப்புத் தரப்பின் கெடுபிடிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஒழுங்கு விதிகளை அதிகரிப்பது தொடர்பான சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

திருகோணமலை மாபரீ பீச் உள்ளிட்ட மீன்பிடிக்கும் பகுதிகள் தற்போது சுற்றுலா விடுதிகளுக்காக முக்கியத்தும் அளிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மீன்பிடித்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி யுத்தம் நிறைவடைந்த பின்னர் இருந்த பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

இதன் பிரகாரம் மீன்பிடி பகுதிகள் கடற்படை மற்றும் தரைப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே மீன்பிடித் துறையில் காணப்படுகின்ற பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

சுற்றுலா விடுதி மற்றும் பாதுகாப்புத் தரப்பின் கெடுபிடியிலிருந்து மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.