(ஏ.என்.ஐ) 

பசிபிக் தீவு நாடுகளுடன் பிராந்திய ஒப்பந்தங்கள் குறித்து சீனா கூடிய அவதானம் செலுத்தியுள்ளது. பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் தனது பங்கை விரிவுபடுத்துவதே இதன் பிரதான இலக்காகியுள்ளது.

இதற்காக 2,000 இளம் தூதரக உத்தியோகஸ்தர்களுக்கு புலமைப்பரிசில் சலுகைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

பசிபிக் தீவு நாடுகளுக்கு 10 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, அடுத்த வாரம் பிஜியில் பிராந்திய தலைவர்களை சந்திக்க உள்ளார்.

அவரது வருகைக்கு முன்னதாக, பெய்ஜிங் 10 பசிபிக் நாடுகளுக்கு ஒப்பந்தத்தின் வரைவுகளை அனுப்பியதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலவிதமான சிக்கல்களை உள்ளடக்கிய ஆவணங்கள் குறித்த நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பெய்ஜிங் நகர்த்தியுள்ளது.

ஆசியாவின் புவிசார் அரசியல் போட்டிகளில் நீண்டகாலமாக ஒரு மூலோபாயப் பங்கைக் கொண்டிருந்த தீவுச் சங்கிலிகளுக்கு பெய்ஜிங் எவ்வாறு நண்பர்களை வெல்ல முயல்கிறது என்பதற்கான விரிவான முயற்சியாகவே இது அமைகின்றது.

மறுப்புறம் இந்த விஜயம் மற்றும் ஒப்பந்தம் இரண்டும் ஆசிய கூட்டணிகளை வலுப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது.

சீன வெளிவிவகார அமைச்சரின்  முதல் நிறுத்தம் சாலமன் தீவுகள் ஆகும். அங்கு அவர் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளார். 

இந்நிலையில் டோக்கியோவில் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் குவாட் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த நிலையில், சீனாவின் பிராந்திய செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

'தன்னுடைய பார்வையில் வாங் யியின் வருகை திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதிக்கு நேரடி சவாலாகும்' என்று சாலமன் தீவுகளின் துணை எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் கெனிலோரியா ஜூனியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சாலமன் தீவுகளின் துணை எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில், 'இப்போது பெய்ஜிங்கால் தங்கள் சொந்த பிராந்திய இலட்சியங்களைத் புறம் தள்ளவும் ஒழுங்கை சீர்குலைக்கவும் சாலமன்ஸ் தீவை பயன்படுத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று  குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.