அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்த உத்தரவிடப்பட்டு, பேர்த் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களான நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தற்காலிக இணைப்பு விசா வழங்கியுள்ளது.

The Biloela Tamil family: Priya and Nades Murugappan and their Australian-born daughters Kopika and TharunicaaPhotograph: Stephanie Coombes

இதனால், அவர்கள் முன்னர் தாம் வசித்து வந்த, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா நகருக்குத் திரும்புவதற்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அவர்கள் பேர்த் நகருக்குள் மாத்திரம் வசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநிலையில் இக்குடும்பத்துக்கு அவுஸ்திரேலிய விசா வழங்கப்பட்டுள்ளது.

நடேஷ் முருகப்பன் குடும்பத்தினர் புகலிட அந்தஸ்து கோரும் வேளையில் அவர்கள் சட்டபூர்வமாக அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கு ஏற்ப தற்காலிக இணைப்பு விசாவை தான் வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசின் பொருளாளரும் பதில் உள்துறை அமைச்சருமான ஜிம் சால்மர்ஸ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அக்குடும்பத்தினருடன் நான் கலந்துரையாடினேன். அவர்கள் பிலோயெலா நகருக்குத் திரும்புவதற்கு வாழ்த்தினேன் என ஜிம் சால்மர்ஸ் கூறினார்.

நடேஷ் எனும்  நடேசலிங்கம் முருகப்பன் 2012 ஆம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலிய சென்றவர். பிரியா 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்றவர். இவர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் சந்தித்து  திருமணம் கொண்டவர்கள்.

அவுஸ்திரேலியாவின் குயின்லாந்த்தில் மாநிலத்திலுள்ள பிலோயலா நகரில் நான்கு ஆண்டுகளாக வசித்து வந்த அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு கோபிகா எனும் மகளும் 2017 ஆம் ஆண்டு தருணிகா எனும் மகளும் பிறந்தனர்.

2018 மார்ச்சில் பிரியாவின் இணைப்பு விசா (பிரிட்ஜிங் விசா) காலாவதியாகிய நிலையில், நடேசலிங்கம், பிரியா ஆகியோரை அவுஸ்திரேலிய எல்லைப்படை கைது செய்தது.

Tamil: Peter Dutton on why asylum seeker family must be deported | The  Courier Mail

இத்தம்பதியினருடன் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு பிள்ளைகளும் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இக்குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கு எதிராக பிலோயலா நகர மக்கள் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கு எதிராக அகதிகள் தீர்ப்பாயம் மற்றும் கீழ் நீதிமன்றத்தில் எடுத்து முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இத்தீர்ப்புகளையடுத்து நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், மேன்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டதால் நாடு கடத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வந்தன. 2018 மார்ச் முதல் இக்குடும்பத்தினர் மெல்பேர்ன் நகரிலுள்ள குடியேற்றவாசிகளுக்கான தடுப்பு முகாமில் ஒன்றரை வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இக்குடும்பத்தினரின் நாடு கடத்தலுக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றமும் நிராகரித்தது.

அதையடுத்து இக்குடும்பத்தினரை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை அவுஸ்திரேலிய அரசு தீவிரப்படுத்தியது.

2019 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி திகதி இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விசேட விமானமொன்றில் அவர்கள் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்டது.

எனினும் இத்தம்பதியின் இரண்டாவது குழந்தை தருணிகா (Tharunicaa) சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவின்  அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து விமானம் அவுஸ்திரேலியாவின் வட பிராந்திய நரான டார்வினில் தரையிறங்கிய போது இக்குடும்பத்தினர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். எனினும் அவர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

தருணிகா சார்பான விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய நகரான பெர்த் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அக்குழந்தையுடன் தாயார் பிரியா மாத்திரம் பெர்த் செல்ல  அனுமதிக்கப்பட்டிருந்தார். தருணிக்காவின் தந்தை நடேசலிங்கமும் மூத்த சகோதரி கோபிகாவும் தொடர்ந்தும் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தமது குடும்பத்தினரை ஒன்றிணைக்க உதவுமாறு பிரியா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்பின் இக்குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக பேர்த்தில் நகரில் தற்காலிகமாக வசிப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹோக் கடந்த வருடம்  ஜூன் மாதம்  அறிவித்தார்.

அண்மையில் நடந்த பொதுத் தேர்தலின்போது, தாம் வெற்றி பெற்றால், நடேஷ் – பிரியா குடும்பத்துக்கு அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கு அனுமதிப்பதாகவும் பிலோயெலா நகருக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப் போவதாகவும் தொழிற்கட்சி கூறியிருந்தது இருந்தது.

இந்நிலையில் நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தற்காலிக இணைப்பு விசா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.