(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு 3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய மருந்துகளை பிரான்ஸ் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவாடு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 26 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற போதே குறித்த மருந்து தொகை கையளிக்கப்பட்டன.

இதன் போது இலங்கையின் சுகாதார சேவைக்கு தேவையான 3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய அத்தியாவசிய மருந்துகள் பிரான்ஸினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

சுவாச நோய் மற்றும் மயக்க மருந்து என்பனவே இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டன.

நெருக்கடியான நிலைமையில் இலங்கைக்கு உதவ முடிந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக பிரான்ஸ் தூதுவர் இதன் போது தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் இவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் சுகாதார சேவையை வழமையைப் போன்று முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கு தேவையான மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விநியோக துறைக்கு இடையூறு ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.