(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக அன்டனி நிஹால் பொன்சேகாவை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில்  இடம்பெற்ற பாராளுமன்ற பேரவை கூட்டத்தின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அத்துடன் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர்களாக தரணி ஷிரந்த விஜயதிலக,ஜயந்த எம்.சுவாமிநாதன்,ஏ,ஏ மொஹமட் ஃபாதிஹூ மற்றும் செல்லத்தம்பி சுமித்ரா ஆகியோரை நியமிக்க பாராளுமன்றப் பேரவை இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பேரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.