(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவிற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் 16 நாட்களாக இடம்பெற்ற தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்கள் கடந்த செவ்வாய்கிழமை முடிவிற்குவந்திருக்கும் நிலையில், இலங்கையின் பொதுக்கடன்களின் நிலைபேறானதன்மையை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையினால் அங்கீகாரமளிக்கப்பட்ட உதவி வழங்கல் செயற்திட்டம் இன்றியமையாததாகும் என்று சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

 அத்தோடு இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் குறித்து தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்தப்படும் என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான செயற்திட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதை முன்னிறுத்தி இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியின் கீழான பொருளாதார செயற்திட்டம் தொடர்பில் பீற்றர் ப்ரூயெர் மற்றும் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினால் கடந்த 9 - 24 ஆம் திகதி வரை இலங்கை அதிகாரிகளுடன் நிகழ்நிலையில் முன்னெடுக்கப்பட்டுவந்த கலந்துரையாடல்கள் முடிவிற்குவந்துள்ளன. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட இலங்கை அதிகாரிகள் குழுவினருடனான தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்களின் முடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது. அதுமாத்திரமன்றி அக்குழு தனியார் துறையினர்,  நிதித்துறைசார் பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்திசார் பங்காளிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியது. 

இக்கலந்துரையாடல்களின் முடிவில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சர்வதேச நாணய நிதிய இயக்குனர் சபையின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவையாக அமையாது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

தற்போது இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கும், அவசியமான கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கான வெளிநாட்டு நாணயப்பற்றாக்குறைக்கும் முகங்கொடுத்துள்ளது. 

மின்விநியோக நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பன பொருளாதார நடவடிக்கைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகளின் மூலம் அறியமுடிகின்றது. 

உலகளாவிய ரீதியில் உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துச்செல்வதானது, இலங்கை ஏற்கனவே முகங்கொடுத்திருக்கும் வெளிநாட்டு நாணயக்கையிருப்புப் பற்றாக்குறை நெருக்கடியை மேலும் தீவிரப்ப்படுத்தியுள்ளது. பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் விலையதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் பணவீக்க அதிகரிப்பிற்குக் காரணமாக அமைந்துள்ளன. 

இந்த நெருக்கடியின் விளைவாக பொதுமக்கள்மீது, குறிப்பாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் நுண்பாகப்பொருளாதாரம் மற்றும் கடன்மீள்செலுத்துகை இயலுமை ஆகியன ஸ்திரமான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வினைத்திறன்மிக்க மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் எமது குழு இலங்கை அதிகாரிகளுடன் தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்களை முன்னெடுத்தது.

நாட்டின் பொருளாதார நிலைவரத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் தற்போது முன்னெடுத்துச்செல்லவேண்டிய முக்கிய கொள்கைகளை அடையாளங்காணல் ஆகியவற்றில் எமது குழு வரவேற்கத்தக்க வகையிலான முன்னேற்றத்தைக் கொண்டிருந்தது. 

இக்கலந்துரையாடல்களின்போது வறிய மற்றும் பின்தங்கிய பிரிவினரைப் பாதுகாக்கும் அதேவேளை, நிதி உறுதிப்பாட்டை நிலைநாட்டல், நாணயக்கொள்கை மற்றும் நாணயமாற்றுவீதம் ஆகியவற்றின்மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தல், நிர்வாகக்கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அவசியமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகியவற்றின்மீது விசேட அவதானம் செலுத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடல்கள் அவசியமான மறுசீரமைப்பு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அதிகாரிகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மேலும் பொதுக்கடன்களின் நிலைபேறானதன்மையை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய முதற்கட்ட முக்கிய நடவடிக்கையாக தமது கடன்வழங்குனர்களுடன் செயற்திறன்மிக்க பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டமையை வரவேற்கின்றோம். 

இலங்கையின் பொதுக்கடன்கள் ஸ்திரமற்ற நிலையிலிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதன் நிலைபேறான தன்மையை உறுதிசெய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையினால் அங்கீகாரமளிக்கப்பட்ட இலங்கைக்கான உதவி வழங்கல் செயற்திட்டம் இன்றியமையாததாகும்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினரால் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான செயற்திட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதை முன்னிறுத்தி இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்படவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதேவேளை நெருக்கடிக்கு நிலைக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக அவசியமான உதவிகளை வழங்குவதற்கான எமது நிலைப்பாட்டையும் மீளுறுதிப்படுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.