(எம்.மனோசித்ரா)

வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு பதிலாக , அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவதானது சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தும் செயற்பாடாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் துரிதமாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்னவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் காணொளிகளைப் பயன்படுத்தி பொலிஸாரினால் கைது செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்கள் அல்லது அவற்றுக்கு தலைமைத்துவம் வகித்த நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததோடு , சட்டமா அதிபரின் ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்ளாமல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்படுவது சட்டத்தை சவாலுக்குட்படுத்தும் செயற்பாடாகும்.

வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்னரே , ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.