(எம்.மனோசித்ரா)

உத்தேச 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசியல் அதிகார விஸ்தரிப்பிற்காக பயன்படுத்த இடமளிக்கக் கூடாது. இத் திருத்தமானது அதன் முக்கிய நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி பெப்ரல் அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

அக் கடித்தத்தில் அமைச்சுப்பதவிகளை வகிப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள உரிமை, பொது மன்னிப்பு வழங்கக் கூடிய அதிகாரம், அமைச்சுக்களின் செயலாளர் , வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட உயர் அரச நியமனங்கள் மற்றும் பொது சொத்துக்கள் , வெளிநாட்டு கடன்கள் தொடர்பான ஒப்பந்தங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய பொறிமுறைகள் தொடர்பான 8 பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரச நிர்வாகத்தின் சிறந்த கோட்பாடுகளை மீண்டும் இணைப்பதற்கான இணக்கப்பாட்டினை நாம் வரவேற்கின்றோம்.

இதன் போது எம்மால் முன்வைக்கப்படும் பின்வரும் பரிந்துரைகளில் அவதானம் செலுத்துமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

அதற்கமைய ஜனாதிபதி அமைச்சுப்பதவியை வகிக்கக் கூடிய உரிமை மட்டுப்படுத்தப்படுவதோடு , அது 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாற்றப்பட வேண்டும்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் 19 ஆவது திருத்தத்தில் காணப்படும் விதிகளுக்கமைய மாற்றப்பட வேண்டும்.

அமைச்சரவை 20 பேரை மாத்திரம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதோடு , இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையும் 20 ஆக மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட வேண்டும்.

அமைச்சுக்களின் செயலாளர்கள் , அரசியலமைப்பு சபை அரச சேவை ஆணைக்குழு என்பவற்றின் பரிந்துரைகளுக்கமையவே நியமிக்கப்பட வேண்டும்.

தூதுவர்கள் மற்றும் தூதுக் குழுக்களின் பிரதானிகளை தெரிவு செய்வதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்பதோடு , அந்த நியமனங்கள் அரசியலமைப்புசபை மற்றும் உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவின் பரிந்துரையின் கீழ் இடம்பெற வேண்டும்.

பொது சொத்துக்கள் தொடர்பான ஒப்பந்தகள் மற்றும் வெளிநாட்டு கடன்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது வெளிப்படைத்தன்மையுடனான பொறிமுறையொன்றை பின்பற்ற வேண்டும் என்பதோடு , அவை பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும்.

அரச நிதி சுயாதீனத்தன்மை , வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புக்கள் என்பன பாதுகாக்கப்படும் வகையிலான முறைமையொன்று தாபிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதிக்கு காணப்படும் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஏதேனுமொரு சட்ட கட்டமைப்பிற்கும் வரம்பிற்கும் உட்பட்டதாக அமைய வேண்டும்.

அத்தோடு சில அரசியல்வாதிகள் மீண்டும் 21 ஆவது திருத்தத்தை தமது அதிகாரப் பகிர்வின் ஒரு அங்கமாக மாற்ற முயற்சிப்பதாகத் தோன்றுவதால் பின்வரும் விடயங்களையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

21 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் பாராளுமன்றத்தினுள் 4 சந்தர்ப்பங்களில் அரசியல் அதிகார மாற்றத்துடன் திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. 21 ஆவது திருத்தம் தற்போது 5 ஆம் கட்டத்தில் உள்ளது.

ஒரே காரணத்துக்காக, தனிநபர்கள் மற்றும் கட்சிகளின் அரசியல் அபிலாஷைகளுக்காக பாராளுமன்றத்தில் நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பதையிட்டு மக்கள் பிரதிநிதிகள் வெட்கப்பட வேண்டும்.

ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட 17, 18, 19 மற்றும் 20 ஆகிய 4 அரசியலமைப்பு திருத்தங்களுக்கும் ஆதரவளித்த மக்கள் பிரதிநிதிகள் காணப்படுகின்றமை ஆச்சரியமளிக்கிறது. அவ்வாறான 23 பிரதிநிதிகள் 23 பேர் இன்றும் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்றனர். அவர்களில் சட்டத்தரணிகளும் , பேராசிரியர்களும் கூட உள்ளடங்குகின்றனர்.

ஐந்தாவது முறையாகவும் திருத்தங்கள் மேற்கொள்ள நேரிட்டுள்ளமையானது , இத் திருத்தம் மக்களுக்கு அந்தளவிற்கு முக்கியத்துவமுடையது என்பதனாலாகும். அத்தோடு இதற்காக இதுவரையில் மனித உயிர்கள், அரச சொத்துக்கள் மற்றும் மக்கள் பிரநிதிகளின் சொத்துக்கள் கூட அழிக்கப்பட்டுள்ளன.

21வது திருத்தம் என்பது போராட்டக்களத்தில் உள்ள மக்கள் மற்றும் நாட்டின் பெரும்பான்மையினரின் கோரிக்கையாகும் என்பதோடு , இது நாட்டின் நல்வாழ்வுக்கும் சர்வதேச சமூகத்தின் ஆதரவிற்கும் பங்களிக்கும்.

எனவே இத்திருத்தத்தை அரசியல் அதிகார விஸ்தரிப்புக்கு பயன்படுத்த இடமளிக்காமல் அதன் முக்கிய நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.