(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

வடக்கில் மூன்று நவீன பனங்கட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதோடு  200 பனைத்தொழில் வல்லுநர்களுக்கு உபகரணங்கள் விரைவில் வழங்கப்படவிருக்கின்றன என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  புத்திக பத்திரண, எழுப்பிய  கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

 அமைச்சர் சுவாமிநாதன்  மேலும் தெரிவிக்கையில், 

வடக்கில் பனைசார் தொழில்களில் 7500இக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செயற்பாடுகளையும், அவற்றின் ஊடாக பனைசார் உற்பத்திகளையும் விருத்தி செய்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மூன்று மில்லியன் பெறுமதியில் நான்கு  பனை வெல்ல உற்பத்தி பொறித் தொகுதி விசுமடு, மானிப்பாய், தெல்லிப்பளை மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பனங்கட்டி தொழிற்சாலைகள் மூன்று விரைவில் அமைக்கப்படவுள்ளன. 

தற்பொழுது பனந்தொழில் உற்பத்தி வல்லுனர்கள் 7,500 பேர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்களில் பெரும்பாலானோர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனினும் தகுந்த முறையில் பனம்பாகு உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு இருப்பின் அனைவரையும் பதனீர் உற்பத்தியில் ஈடுபட வைக்க முடியும். தற்பொழுது இதன் மூலம் நேரடியாக 1,200 குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனை விட மறைமுகமாக தொழிலாளர்கள் விற்பனையாளர்கள் என தற்போது வரையில் 2,000 பேர் வரை பயன்பெற்று வருகின்றனர் என்றார்.