(என்.வீ.ஏ.)

கரோலினா ப்ளிஸ்கோவாவை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த 227ஆம் நிலை வீராங்கனை லியோலியா ஜீன்ஜீன், 2022 பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் வரலாறு படைத்தார்.

No description available.

மகளிர் ஒற்யைருக்கான 2ஆவது சுற்றில் சிறந்த நுட்பத்திறனுடன் விளையாடிய பிரான்ஸ் வீராங்கனை லியோலியா, 6 - 2, 6 - 2 என்ற நேர் செட்களில் நிரல்படுத்தலில் 8ஆம் இடத்திலிருந்த கரோலினா பிளிஸ்கோவாவை வெற்றிகொண்டார்.

வைல்ட் கார்ட் முறையில் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற லியோலியா, அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றியீட்டி 3ஆம் சுற்றுக்கு முன்னேறினார்.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் கரோலினா ப்ளிஸ்கோவாதான் வெற்றிபெறுவார் என்ற பரவலான எதிர்பார்ப்பு நிலவியது. ஏனேனில் தரவரிசையில் லியோலியாவைவிட 219 இடங்கள் வித்தியாசத்தில் கரோலினா முன்னிலையில் இருக்கிறார்.

எனினும் கரோலினாவுடனான போட்டியில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய லியோலியா அபார வெற்றியீட்டி வரலாறு படைத்தார்.

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் வரலாற்று தரவரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வீராங்கனை ஒருவர், 10 இடங்களுக்குள் உள்ள வீராங்கனையை வெற்றிகொண்டிருப்பது கடந்த 34 வருடங்களில் இதுவே முதல் தடவையாகும்.

1988இல் முன்னணி வீராங்கனை லோரி மெக்நீலை தரவரிசையில் மிகவும் பின்னிலையில் இருந்த கொன்ச்சிட்டா மார்ட்டினெஸ் வெற்றிகொண்டிருந்தார்.

சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட ஹாலெப் தோல்வி

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியின் போது சுவாசிப்பதற்கு பெரும் சிரமத்தை எதிர்கொண்ட முன்னாள் சம்பியன் சிமோனா ஹாலெப் 2ஆம் சுற்றில் சீன வீராங்கனை ஸெங் கின்வென்னிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

அப் போட்டியில் 2 - 6, 6 - 2, 1 - 6 என்ற புள்ளிகளை கொண்ட 1 - 2 செட்கள் அடிப்படையில ஸெங் கின்வென்னிடம் ஹாலெப் தோல்வி அடைந்தார்.  

இந்தப் போட்டி முடிவுடன் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் மகளிருக்கான நிரல்படுத்தலில் முதல் 10 இடங்களில் இருந்தவர்களில் 7 வீராங்கனைகள் வெளியெறியுள்ளனர்.

நிரல்படுத்தலில் 1ஆம் இடத்திலுள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், 3ஆம் இடத்திலுள்ள ஸ்பானிய வீராங்கனை போலா படோஸா, 7ஆம் இடத்திலுள்ள பெலாரஸ் வீராங்கனை அரியானா சபாலென்கா ஆகியோரே முதல் 10 இடங்களை வகிக்கும் வீராங்கனைகளில் எஞ்சியுள்ள மூவராவர்.