பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழாவில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Image
இந்திய பிரதமர் நரேந்திர மோடி

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளது. இலங்கையின் நெருங்கிய நண்பனும் அண்டை நாடுமான இந்தியா நிதியுதவியை மாத்திரமின்றி உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை  வழங்கி வருகிறது. இந்தியாவானது இலங்கை மக்களுடன் தொடர்ந்து துணைநிற்கும். 

பல இந்திய அமைப்புகள், தனி நபர்கள், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மலையக தமிழர்கள் உட்பட அந்நாட்டில் இருக்கும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.

இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச அரங்கில் இந்தியா பேசி வருகிறது. ஜனநாயகம், ஸ்திரதன்மை, பொருளாதார மீட்பு தொடர்பாக இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும். இலங்கையின் யாழ்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன் சென்ற எனது பயணத்தை மறக்க முடியாது. 

யாழ்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகிறது. உடல்நலம், போக்குவரத்து, கலாச்சாரம் சார்ந்த உதவிகளை இந்தியா வழங்குகிறது." என்றார்.