(என்.வீ.ஏ.)
இலங்கைக்கு எதிராக கராச்சியில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2ஆவது மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டிய பாகிஸ்தான், 3 போட்டிகள் கொண்ட தொடரை இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டக்கணக்கில் தனதாக்கிக்கொண்டது.

ஆயிஷா நசீம், அணித் தலைவி பிஸ்மா மாறூவ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 70 ஓட்டங்கள் பாகிஸ்தானின் வெற்றியை இலகுபடுத்தியது.
முதலாவது போட்டியில் போன்றே 2ஆவது போட்டியிலும் இலங்கை மகளிர் அணி பிரகாசிக்கத் தவறியது.
அதிரடி வீராங்கனை, அணித் தலைவி சமரி அத்தப்பத்து இரண்டாவது தடவையாக இந்தத் தொடரில் பிரகாசிக்கத் தவறியமை இலங்கை அணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

அத்துடன் இலங்கை மகளிர் அணியின் ஒட்டுமொத்த துடுப்பாட்டம் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக மோசமாக இருந்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை சார்பாக ஹாசினி பேரேரா (35), நிலக்ஷி டி சில்வா (21), ஹர்ஷிதா மாதவி (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
முதலாவது போட்டி நாயகி துபா ஹசன் (13-1 விக்.), அனாம் அமின் (16-1 விக்.), நிதா தார் (20-1), பாத்திமா சானா (21-1 விக்.), ஆய்மான் அன்வர் (28-1 விக்.) ஆகிய ஐவரும் தலா 4 ஓவர்களை மிகவும் கட்டுப்பாட்டுடன் வீசினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீடடியது.
ஆயிஷா நசீம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை சுலப்படுத்தினார்.
அணித் தலைவி ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட முனீபா அலி (17), இராம் ஜாவேத் (11) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.
பந்துவீச்சில் அச்சினி குலசூரிய (11-1 விக்), ஓஷாதி ரணசிங்க (16-1 விக்.), இனோக்கா ரணவீர (23-1 விக்.) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3ஆவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.