பொருளாதார நெருக்கடியின் விளைவாக பொது மக்கள் முகங்கொடுத்திருக்கும் துன்பத்தையும் அவர்களின் கோபத்தையும் தன்னால் நன்கு புரிந்துகொள்ள முடிவதாக தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெகு விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு - செலவு திட்டத்தில் முன்னர் இருந்ததைப் போன்று வரி வீதங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமராகிறார் ரணில்? - tamilnaadi.com

மேலும் இலங்கை சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கவில்லை என்றும் , சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தததன் பின்னர் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் புளும்பேர்க் என்ற ஆங்கில இணைய ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்திருக்கின்றார். 

அந்நேர்காணலில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு :

கேள்வி : நிதி அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் நீங்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் ?

பதில் : சர்வதேச நாணய நிதியத்துடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நேற்று முடிவிற்கு வந்துள்ளன. அதில் நானும் கலந்து கொண்டிருந்தேன். சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக காணப்பட்ட போதிலும் , எதிர்வரும் 2025 ஆம் ஆண்டாகும் போது வரவு - செலவு திட்ட பற்றாக்குறையானது 2 சதவீதமாக இருக்க வேண்டும் என அவர்களால் வலியுறுத்தப்பட்டமை சிக்கலான விடயமாகவுள்ளது.  

குறிப்பாக 2023 ஆம் ஆண்டளவில் பெருமளவிற்கு பொருளாதார முன்னேற்றத்தினை அடைந்து கொள்ள முடியாத நிலைமையே காணப்படும் என்பதால் இது சிக்கலானதாக இருக்கின்றது. அதே போன்று பொருளாதார மறுசீரமைப்பொன்றை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன் போது வலியுறுத்தப்பட்டது. எமது பொருளாதாரம் ஏற்றுமதிகளை மையப்படுத்தியதாக மாற்றப்பட வேண்டும். அது மாத்திரமன்றி பொருளாதார கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்களவிலான மாற்றங்கள் அவசியமாகின்றன.

கேள்வி : இடைக்கால வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பிக்க போவதாக கூறியிருந்தீர்கள். அதில் வரி அறவீட்டில் அதிகரிப்பு உள்ளடங்கலாக சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புக்கள் எவை?

பதில் : ஆம். இடைக்கால வரவு - செலவு திட்டத்தில் வரிகள் அதிகரிக்கப்பட்டு பழைய நிலைக்கு கொண்டு வரப்படும். இருப்பினும் கல்வித்துறை , சுகாதாரத்துறை ஆகியன தவிர்ந்த ஏனைய துறைகளுக்கான  செலவுகளை குறைப்பதே வரவு - செலவு திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அவ்வாறு அநாவசிய செலவீனங்களை குறைப்பதன் மூலம் அவற்றை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சமூகம் சார் நடவடிக்கைகளுக்காக செலவிட முடியும். 

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக பெருமளவானோர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் முகங்கொடுத்திருக்கும் துன்பத்தை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடியும். அவர்களின் கோபத்தையும் என்னால் உணர முடிகிறது. அநேகமானோர் ஒருவேளை உணவை உண்ண முடியாத நிலையில் இருக்கின்றனர்.

கேள்வி : கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை நாங்கள் உணர்கின்றோம். இருப்பினும் கடன்களை மீள செலுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகிய தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு என்ன?

பதில் : சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முடிவிற்கு வந்ததன் பின்னர் இது குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என தீர்மானித்திருக்கின்றோம். அவர்களிடம் கடன் மறுசீரமைப்பதற்கான கோரிக்கையை முன்வைப்போம்.

கேள்வி : சீனாவிற்கு மீள செலுத்த வேண்டிய கடன் தொகை எவ்வளவு? இலங்கை சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறதா?

பதில் : இல்லை. நாங்கள் கடன் பொறிக்குள் சிக்கவில்லை. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு ஒரே அளவானவையாகவே உள்ளன. ஆனால் சீனாவின் கடன்களுக்கான வட்டி வீதம் சற்றே உயர்வாகக் காணப்படுகிறது என்றார்.