(என்.வீ.ஏ.)

பங்களாதேஷுக்கு எதிராக டாக்கா, ஷியரே பங்ளா தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 ஆவதும் கடைசியுமான போட்டியின் நான்காம் நாளான இன்று வியாழக்கிழமை (26) சிரேஷ்ட வீரர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் குவித்த அபார சதங்கள் இலங்கை அணியை பலமான நிலையில் இட்டுள்ளது.

போட்டியின் நான்காம் நாளான இன்று  வியாழக்கிழமை  காலை தனது முதலாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, கடைசி விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 506 ஓட்டங்களாக இருந்தது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 141 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த பங்களாதேஷ் அதன் 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 34 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான நிலையில் இருக்கின்றது. இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து மீள்வதற்கு 2ஆவது இன்னிங்ஸில் இன்னும் 6 விக்கெட்கள் மீதமிருக்க பங்களாதேஷ் மேலும் 107 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

ஏஞ்சலோ மெத்யூஸ் 58 ஓட்டங்களிலிருந்தும் தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்களிலிருந்தும் தங்களது துடுப்பாட்டங்களை  நம்பிக்கையோடு  இன்று காலை  தொடர்ந்தனர்.

தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் இருவரும் தத்தமது சதங்களைப் பூர்த்திசெய்தனர்.

நிதானத்துடனும் நம்பிக்கையுடனும் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ் 342 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 145 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

தனது 96ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் மெத்யூஸ் குவித்த 13ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும். பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்டில் மெத்யூஸ் 199 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

மெத்யூஸைவிட சற்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால் 219 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 124 ஓட்டங்களைப் பெற்றார்.

தனது 66ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்திமால் பெற்ற 12ஆவது சதம் இதுவாகும். அத்துடன் 2018க்குப் பின்னர் அவர் பெற்ற முதலாவது டெஸ்ட் சதமாகும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சென். லூசியாவில் 2018 ஜூன் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலேயே தினேஷ் சந்திமால் கடைசியாக சதம் குவித்திருந்தார்.

அவர்கள் இருவரும் பகிர்ந்த 199 ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை துடுப்பாட்ட ஜோடியினரால் பெறப்பட்ட 6ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.

பின்வரிசையில் ரமேஷ் மெண்டிஸ் (10) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ஷக்கிப் அல் ஹசன் 96 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஈபாதொத் ஹொசெய்ன் 148 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Dinesh Chandimal and Angelo Mathews added 199 runs for the sixth wicket, Bangladesh vs Sri Lanka, 2nd Test, Mirpur, 4th day, May 26, 2022

தமிம் இக்பால் (0), நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (2), அணித் தலைவர் மொமினுள் ஹக் (1), மஹ்முதுல் ஹசன் ஜோய் (15) ஆகியோரே ஆட்டமிழந்தவர்களாவர்.

பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸ் ஹீரோக்களான முஷ்பிக்குர் ரஹிம் (14), லிட்டன் தாஸ் (1) ஆகிய இருவரும் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காதிருந்தனர்.

கடைசி நாள் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் இந்த இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தால் இந்த டெஸ்ட் போட்டியிலும் தொடரிலும் இலங்கைக்கு வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது.

எனவே திமுத் கருணாரட்ன சிறப்பான களத்தடுப்பு வியூகங்களை அமைத்து தனது பந்துவீச்சாளரகள் விக்கெட்கள் சரிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொடுப்பார் என கருதப்படுகிறது.

எண்ணிக்கை சுருக்கம்

பங்களாதேஷ் 1ஆவது இன்: 365 (முஷ்பிக்குர் ரஹிம் 175 ஆ.இ., லிட்டன் தாஸ் 141, கசுன் ராஜித்த 64 - 5 விக்., அசித்த பெர்னாண்டோ 93 - 4 விக்.)

இலங்கை 1ஆவது இன: 506 (ஏஞ்சலோ மெத்யூஸ் 145 ஆ.இ., தினேஷ் சந்திமால் 124, திமுத் கருணாரட்ன 80, தனஞ்சய டி சில்வா 58, ஓஷத பெர்னாண்டோ 57, ஷக்கிப் அல் ஹசன் 96 - 5 விக்., ஈபாதொத் ஹொசெய்ன் 148 - 4 விக்.)

பங்களாதேஷ் 2ஆவது இன்: (4ஆம் நாள் ஆட்டநேர முடிவில்) 34 - 4 விக். (அசித்த பெர்னாண்டோ 12 - 2 விக்., கசுன் ராஜித்த 12 - 1 விக்.)