(எம்.எப்.எம் பஸீர்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு அமைந்துள்ள கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஐந்தாம் ஒழுங்கை கேம்பிரிஜ் பிளேஸ்  பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பதை (நோ டீல் கம எனும் தொனிப்பொருளில் ( தடை செய்யுமாறு  முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம்  இன்று (26) நிராகரித்தது.

மைனா கோ கமவை தொடர்ந்து உருவாகும் நோ டீல் கம

கொழும்பு மேலதிக நீதிவான் அர்ஷன கெக்குனவல இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

அமைதி போராட்டங்களை தடுக்க நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிப்பதில்லை எனவும், எனினும் கல்வி பொதுதராதர சாதாரண தர மாணவர்களின் கல்வி ,பரீட்சை நடவடிக்கைகள் மற்றும் மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை தடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிவான் இவ்வாறு உத்தரவு வழங்க மறுத்தார்.

இன்றைய தினம் கறுவாத்தோட்டம் பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் அர்ஷன கெக்குனவல முன்னிலையில் தடையுத்தரவு கோரி இது தொடர்பிலான மனுவை தாக்கல் செய்தனர்.

பொலிஸாருக்காக அரசின் சிரேஷ்ட மேலதிக சொலிசிடர் ஜெனரால் பிரியந்த நாவானமன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்தார்.

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு அமைந்துள்ள கறுவாத்தோட்டம் ஐந்தாம் ஒழுங்கையில் கூடாரம் அமைத்து ஆர்பாட்டம் முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசியலமைப்பின் பிரகாரம் கருத்து மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பயன்படுத்தி அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்ட மக்களுக்கு உரிமை உள்ளது.

எனினும் அது விதிவிலக்கற்ற உரிமையல்ல எனவே பொது மக்களுக்கு  பாதிப்பு ஏற்படும் வகையில் ஆர்பாட்டம் முன்னெடுக்க முடியாது.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள பகுதியில், அதனை அண்மித்து இடம்பெறும் அமைதி போராட்டம் ஒன்று ஒரு வேளை சட்டவிரோத கூட்டமாக மாறினால் அதனை தடுப்பதற்கு பொலிஸாருக்கு குறைந்தப்பட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதன்போது அப்பகுதிகளை அண்மித்து பரீட்சை மையங்களில் கல்வி பொதுதராதர சாதாரன தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாதிப்படையலாம்.

எனவே பிரதமரின் வீட்டை அண்மித்த கேம்பிரிஜ் பிளேஸ் பகுதி வீதிகளில் இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் பாடசாலை நடவடிக்கைளுக்கு பாதிப்பு  ஏற்படுத்தும் வண்ணம் பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வண்ணம், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதை தடுத்து  குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 98 ஆவது அத்தியாயத்திற்கமைய உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோருகிறேன் என மேலதிக சொலிசிடர் ஜெனரால் பிரியந்த நாவான மன்றில் கோரினார்.

 இதன்போது அமைதி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கும் உரிமை தொடர்பில் மன்றில் பெருமளவான சட்டத்தரணிகள் குறித்த கோரிக்கையை நிராகரிக்குமாறும்,பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் அமைதி போராட்டங்கள் இல்லை எனவும் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் அர்ஷன கெக்குனவெல அமைதி போராட்டங்களை தடை செய்யும் உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதில்லை என சுட்டிக்காட்டி, கறுவாத்தோட்டம் பொலிஸார், சட்டமாதிபர் திணைக்களம் ஊடாக முன்வைத்த கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.