( எம்.எப்.எம்.பஸீர்)

மத்திய வங்கி பிணை மோசடி தொடர்பில்  ( 2015) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என பிரதிவாதிகள் சார்பில் அடிப்படை ஆட்சேபனம் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த சட்ட மா அதிபரின் பதில் வாதங்களுக்காக குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தக் கோரி 3 ஆவது முறையாக அனுப்பிய ஆவணங்களை  பரிசீலிக்கிறது சிங்கப்பூர் | Virakesari.lk

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறிகள் ஏலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக 23 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் விஷேட  தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (26) விசாரணைக்கு வந்தது.

முதலாவது நிரந்தர மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொடவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோர் முன்னிலையில் விசேட மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முதல் பிரதிவாதி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும்  10 ஆம் பிரதிவாதி பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அஜான் புஞ்சிஹேவா தவிற ஏனையோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

 இதன்போது, கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி,  இந்த வழக்கினை முன்னெடுத்து செல்ல முடியாது எனக் கூறி  ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா முன் வைத்த  அடிப்படை ஆட்சேபனத்தை  மையபப்டுத்தி இன்று ( 26) அனைத்து சந்தேக நபர்கள் சார்பிலும் எழுத்து மூல சமர்ப்பணம் முன் வைக்கப்பட்டது.

அதன்படியே குறித்த ஆட்சேபனம் தொடர்பில் பதில் வாதங்களை முன் வைக்க சட்ட மா அதிபருக்கு அவகாசம் அளித்து வழக்கு எதிர்வரும்  ஜூலை 4 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் பத்தாவது பிரதிவாதியான அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி முன்னெடுத்து செல்ல மேல் மாகாண முதலாவது நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம்   அனுமதியளித்தது.

குற்றவியல் சட்டத்தின் 450 (8) ஆம் அத்தியாயத்துக்கு அமைய சட்ட மா அதிபர் சார்பில்,  முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, அர்ஜுன மகேந்திரன், அஜான் கார்டியா புஞ்சிஹேவா  ஆகிய பிரதிவாதிகள்   மன்றில் ஆஜராவதை புறக்கணிக்கும் நிலையில், அவர்கள் இல்லாமலேயே அவர்களுக்கு எதிரான குற்ரச்சாட்டுக்களை விசாரணைக்கு எடுக்க  நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.