(எம்.மனோசித்ரா)

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இலங்கைக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இணக்கப்பாட்டினைத் தெரிவித்துள்ள நிலையில் , அடுத்த வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ள குழு இறுதி இணக்கப்பாட்டினை அறிவித்தால் ஒத்துழைப்புக்களைப பெற்றுக் கொள்ள முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான முதற்கட்டப்பேச்சுவார்த்தைகள் கடந்த ஏப்ரல் மாதம் வொஷிங்கடனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றன. முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி , மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டோர் தலைமையிலான குழு இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தன.

அதனையடுத்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையடுத்து , புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கைமட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.