(நா.தனுஜா)

பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போதுள்ள பேரினப்பொருளாதார நிலைமைகள், அதனால் வங்கித்தொழிற்துறைமீது ஏற்பட்டுள்ள தாக்கங்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு வங்கித்துறையை வலுப்படுத்துவதற்கு அவசியமான அதிவிசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதேவேளை செயற்திறன்மிக்க நிதியியல் முறைமை மற்றும் கடன்வழங்லை மேலும் இலகுபடுத்துவதற்கு ஏற்றவகையில் வங்கித்துறைக்கு ஆதரவளிற்கும் நோக்குடன் தாம் முன்னெடுப்பதற்குத் தீட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கையொன்றின் மூலம் மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. அவை வருமாறு:

இலங்கையின் வங்கித்தொழிற்துறையானது இறுக்கமான சூழ்நிலையில் பயன்படுத்தக்கூடியவகையில் 2.5 சதவீத மூலதனப்பாதுகாப்பு இருப்பைப் பேணிவருகின்றது.

எனவே மூலதனப்பாதுகாப்பு இருப்பை மீளப்பெறுவதற்கு ஏற்றவகையில் வங்கிகளுக்குத் துறை ரீதியான நெகிழ்ச்சித்தன்மை வழங்கப்படுவதுடன், இது பங்குதாரர்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் கட்டுப்பாடுகள், இலாபங்கள மீளனுப்புதல் மற்றும் 3 ஆண்டுகளுக்குள் மூலதனப்பாதுகாப்பு இருப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டத்தைச் சமர்ப்பித்தல் ஆகிய நிபந்தனைகளுடன் கூடியதாகவே வழங்கப்படும்.

 உரிமம்பெற்ற வங்கிகள் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச மூலதனத்தேவைப்பாட்டைப் பூர்த்திசெய்வதற்கான காலஎல்லை எதிர்வரும் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் குறைந்தபட்ச மூலதனத்தேவைப்பாட்டைப் பூர்த்திசெய்யமுடியாத உரிமம்பெற்ற வங்கிகள் இக்கால எல்லைக்குள் பொருத்தமான நிதியியல் நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள் உள்ளிட்ட தமது மூலதன மேம்படுத்தல் திட்டத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்.

அதுமாத்திரமன்றி இவை குறைந்தபட்ச மூலதனத்தேவையைப் பூர்த்திசெய்யும் வரை பங்குலாபங்களை வழங்கல் மற்றும் இலாபங்களை மீளனுப்புதல் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்கவேண்டும்.

 எதிர்வரும் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரையில் போதுமான மூலதன அளவின் விகிதத்தைக் கணிப்பிடும் நோக்கங்களுக்காக இலங்கை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அரச பிணையங்களின் மீதான தேறல் செய்யப்படாத சந்தைப்பெறுமதி இழப்புக்களைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்வதற்கு உரிமம்பெற்ற வங்கிகளுக்கு நிபந்தனைகளுக்குட்பட்ட நெகிழ்ச்சித்தன்மை வழங்கப்பட்டுள்ளது.

 பன்னாட்டுத் தரங்களுக்கு அமைவாகப் போதுமானளவில் மூலதனத்தைப் பேணுவதற்காக ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தைப் பயன்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வங்கிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மை வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வருடத்திற்கான உள்ளக மூலதனத்தின் போதுமான அளவு முறைமை ஆவணத்தைச் சமர்ப்பிப்பதற்கான உரிமம்பெற்ற வங்கிகளுக்கான கால அவகாசம் எதிர்வரும் ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

குறுங்கால நடவடிக்கையின் ஊடாக உரிமம்பெற்ற வங்கிகளின் திரவத்தன்மையை உரியவாறு பேணுவதற்காக, எதிர்வரும் நவம்பர் மாதம் வரை திரவத்தன்மைக் காப்பீட்டு விகிதம் மற்றும் நிகர நிலையான நிதியிடல் விகிதம் ஆகியவற்றை 90 சதவீதத்திற்குக் குறையாமல் பராமரிப்பதற்கு அவற்றுக்கு நெகிழ்ச்சித்தன்மை வழங்கப்பட்டுள்ளது.