போராட்டங்கள் புதிய தேசத்தினைக் கட்டியெழுப்ப உதவுமா? பகுதி 03

Published By: Digital Desk 3

26 May, 2022 | 02:27 PM
image

எமது நாட்டில் செல்வந்த வரி (wealth tax) அறிவிடல் தொடர்பான கொள்கைகள் இன்மையும் இவ்வாறான மோசடி செயற்பாடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. செல்வந்த வரி என்பது பெரும் வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தர்களிடம் அதிக வரியினை அறவிட்டு, அந்த வருமானத்தினை கொண்டு சமூகத்தில் காணப்படும் ஏழை – பணக்காரன் என்ற இடைவெளியினை சரிசெய்து சமூகத்தில் சமத்துவத்தினை நிலைநாட்டுவதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் வரி அறவீட்டு முறையாகும். அத்தகையதொரு வரி அறவீட்டு முறை இலங்கையில் காணப்படுமாயின், தற்போதைய நெருக்கடியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற அடிதட்டு மக்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்தலாம். 

போராட்டக்காரர்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை எதிர்ப்பதற்கு பிரிதொரு காரணம் அது ஊழல் மோசடிகள் நிறைந்து காணப்படுவதாகும். பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அண்மையில் எழுதிய ஆங்கில கட்டுரையொன்றில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், எதிர்காலத்தில் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் இடம்பெறும் போது அதில் “மீளழைக்கும் முறை” (Recall) அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என வாதிடுகின்றனர். 

அதாவது, மக்கள் ஆணையினை மறுதலித்து செயற்படும் ஊழலில் ஈடுப்படும் அரசியல்hதிகளை மீள அழைப்பதற்கான (பதவியில் இருந்து) உரிமை  மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகின்றது. இம்முறை இந்தியா, பெரு, லித்வியா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா போன்ற பல நாடுகளில் வேறுப்பட்ட வடிவங்களில் வேறுப்பட்ட மட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை மற்றும் அரச அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்குவதற்கு மக்களுக்கு அதிகாரத்தினை வழங்கியுள்ளது.

காரணம் தற்போது காணப்படும் பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு  ஊழல் அற்ற, நேர்மைதிறன் கொண்ட, தகைமையுள்ள, சரியான கொள்கைகளுடன் செயற்படக்கூடிய அரசியல்வாதிகளையோ அல்லது தூய்மையான அரசியல் கலாசாரம் ஒன்றினை உருவாக்க முடியாது. ஆகவே, இந்த போராட்டங்கள் ஜனநாயக மறுசீரமைப்பினை வலியுறுத்துகின்றன என்பது வெளிப்படுகின்றது. 

அத்தகைய மறுசீரமைப்புகளை உடனடியாக செய்ய வேண்டும். காரணம் அதற்கான தருணம் இன்று மலர்ந்துள்ளது.  அது வெறுமனே  20ஆவது திருத்தத்தினை இல்லாது செய்து 21ஆவது திருத்தத்தினை கொண்டு வருவது  மாத்திரம் அல்ல.  ஜனநாயக மறுசீரமைப்புக்கள் அதனைத்தாண்டி செல்ல வேண்டும். உள்நாட்டில் மாத்திரம் அல்ல வெளிநாடுகளில் இலங்கையர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போராட்டங்களும் ஜனநாயக மற்றும் ஆட்சிமுறையில் மறுசீரமைப்புக்கள் அவசியம் என்பதனை வெளிக்காட்டுகின்றன. 

வெளிநாடுகளில் இடம்பெறும் போராட்டங்கள் ஜனநாயக மறுசீரமைப்புக்கான வெளி ஆதரவினை திரட்டுவதாக, குறிப்பாக சர்வதேசத்தின் ஆதரவினை திரட்டுவதாக அமைந்துள்ளது. இந்தப்போராட்டங்களிலும் இன ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தினை காண முடிகின்றது இது முன்னொருபோதும் நிகழாத விடயமாகும். புலம்பெயர் தமிழர்களும் சிங்களவர்களும் வேறுப்பட்ட அடையாளங்களைப் பேணி வந்துள்ளனர். இலங்கையின் தற்போதைய நெருக்கடி அவர்கள் மத்தியிலும் ஒரு வகையான புரிதலையும், பொது புள்ளியில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பினையும் வழங்கியுள்ளது. 

அரசியல் மறுசீரமைப்பு மற்றும் சவால்கள்

ஜனநாயக மறுசீரமைப்புகளில் முக்கியமான அம்சமாக வலியுறுத்தப்படுவது சர்வாதிகார ஆட்சியினை  ஒழிப்பதாகும். குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதாகும். தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பாராளுமன்ற பொறுப்புகூறலில் இருந்து விடுபட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் ஒரு பிரதான காரணம் என்பது பலதரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது. 

இலங்கையில் பின்பற்றப்படும் ஜனாதிபதி முறையில் காணப்படும் பிரதான குறைப்பாடு யாதெனில் ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான தடைகள் மற்றும் சமன்பாடுகள் (Checks and Balances) இல்லாமையாகும். உலகில் பலம் வாய்ந்த நாடாக காணப்படும் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்க அரசியல் அமைப்பிலே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இல்லாதொழிக்கப்படுவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொழுது சிறுபான்மை அரசியல் கட்சிகள் அதனை எதிர்த்தன. அதற்கொரு காரணத்தினையும் முன்வைத்தார்கள். ஜனாதிபதி சகல சமூகத்தவர்களாலும் தெரிவுசெய்யப்படுவதனால் சிறுபான்மை மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்பதே அந்த வாதமாகும். ஆனால், அந்த வாதம் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் செல்லுப்படியற்றதாகி விட்டது –அதனை இனியும் முன்வைக்க முடியாது. 

ஆகவே, இம்முறையினை ஒழிப்பது தொடர்பாக சிறுபான்மை கட்சிகள் தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உறுதியான பாராளுமன்ற அரசாங்க முறையொன்றின் மூலம் சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்க முடியும்.  அதற்கு உலகில் பல நாடுகளை உதாரணமாக கொள்ளலாம் (கனடா, நியுசிலாந்து, பிரித்தானியா). மே மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ஆற்றிய உரையிலும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறையும் காரணமென்பதனை இன்று அவர் புரிந்துக்கொண்டுள்ளார். ஆயினும் அது காலம் கடந்த ஞானமாகும். 

தற்போதைய போராட்டங்களினூடாக வலியுறுத்தப்பட வேண்டிய பிரிதொரு முக்கியமான விடயம் மத சார்பற்ற இலங்கையினை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்தாடலாகும். இன்றைய போராட்டங்களுடைய நிலையான பெறுபேறு இலங்கையினை மதசார்பற்ற நாடாக நிலைமாற்றம் செய்வதன் மூலம் ஏற்படலாம். புதிய இலங்கை தேசம் என்பது மதசார்பற்றதாக அமைய வேண்டும்.   

அவ்வாறன்றில் கடந்த 74 ஆண்டுகளாக உரமூட்டி வளர்க்கப்பட்டுள்ள இன, மத மற்றும் மொழி பிரதேச தேசியவாதம் தொடர்ந்தும் இலங்கை தேசத்தினை அழித்துக் கொண்டே இருக்கும். அந்த அழிவு காலத்திற்கு காலம் புதிய புதிய வடிவங்களில் வடகிழக்கு தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற அடிப்படையில் இந்த நச்சு வட்டும் சூழன்று கொண்டு இருக்கும். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தரப்பினர் இலக்கு வைக்கப்படுவர் என்பது எமது கடந்தகால இலங்கை அனுபவமாகும். மதசார்பற்ற தேசம் ஒன்று உருவாக்கப்பட்டால் அது மதத் தலைவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான வாய்பினை வழங்கும். 

இலங்கை தேசத்தின் தற்போதைய நெருக்கடிக்கு அரசியலில் இருந்து மதத்தனை பிரித்து வைக்காமை பிரதான காரணமாகும். ஆகவே,  தற்போதைய நெருக்கடிக்கு பௌத்த பிக்குகளும் பொறுப்பு கூற வேண்டும் என்ற கோசமும் இன்று எழுச்சி பெற்று வருவதனை காணமுடிகின்றது. இது ஒரு முற்போக்கான அபிவிருத்தியாகும். இக்கருத்தாடலை தொடர்ச்சியாக பேணவேண்டும், சமூகமயப்படுத்த வேண்டும். 

புதிய ஜனநாயக கலாசாரத்தின் எழுச்சி

இந்தப் போராட்டங்களின் ஊடாக பலமான ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக சுதந்திரமான அச்சமின்றி கருத்துக்களை வெளியிடுவதற்கு சாதகமான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது; அவர்களின் ஆதிக்கத்தினை அச்சமின்றி விமர்சிப்பதற்கு குறிப்பாக, அரசியலில், நிர்வாகத்தில், சட்டத்தினை அமுல்படுத்;துவதில், தேசிய பாதுகாப்பில், ஊடகத்தில், நீதியினை நிர்வகிப்பதில் மற்றும் தனியார் துறையில், நிலைமை ஏற்பட்டிருப்பதாக பேராசியர் ஜயதேவ உயன்கொட குறிப்பிடுகின்றார். 

இது ஒரு முக்கியமான மாற்றமாகும். ஒரு பலமான, சர்வாதிகார ஆட்சியாளரை எதிர்ப்பது சாதாரண விடயமல்ல. மிகவும் இருக்கமான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலே இத்தகைய எதிர்ப்புகள் இடம்பெற்று வருகின்றன. ‘தேசியப் பாதுகாப்பு அரசு’ ஒன்றின் கீழ் இவை இடம்பெறுகின்றன.  மே மாதம் 9ம் திகதி ஆர்பாட்டகாரர்கள் மீது குண்டர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் இப்போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வந்து விடும் என பலரும் அச்சம் கொண்டார்கள். ஆனால் ஒரு சில மணித்தியாலத்திற்குள்; மீண்டும் இளைஞர்கள், ஏனைய தரப்பினரின் ஆதரவுடன் அணித்திரண்டு தமது போராட்டத்தினை தொடர்ந்தது மாத்திரமல்லாமல், தாக்குதல் மேற்கொண்டவர்களையும் அடையாளம் கண்டு தக்க பாடம் கற்பித்து, அந்த தாக்குதலின் பின்னால் இருந்த சூத்திரதாரர்களையும் அம்பலப்படுத்தினார்கள். 

இது இந்தப் போராட்டத்திற்கு புதிய பரிணாமத்தினை வழங்கியதுடன், இதுவரைக்காலம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ள வழி செய்தது. இது இப்போராட்டத்தின் பொது நோக்கத்தினை மேலும் வலுப்படுத்தியுள்ளது எனலாம். 

இதன் மூலம் வெளிப்பட்ட பிரிதொரு விடயம் யாதெனில், இந்தப் போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தியலை, தலைமையினை, படிநிலையமைப்பினை, தனிப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்ட மரபு ரீதியான ஊழல் நிறைந்த மற்றும் பாராளுமன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட போராட்டம் என்பதனையாகும்.  இதுவும் ஒரு வகையான நேரடி ஜனநாயக முறையாகும். இதன் காரணமாக போராட்டக்களம் திறந்ததாகக் காணப்படுகின்றது. 

எந்த ஒரு சமூக வகுப்பினையும் இன, மத, பால்நிலை மற்றும் வேறுப்பட்ட அடையாளத்தினை கொண்டவர்களும் எந்நேரமும் வந்துப் போக கூடிய இடமாக காணப்படுகின்றது. போராட்டங்கள் ஒரு பக்கம் வெற்றிகரமாக இடம்பெற்று வரும் அதேவேளை, இதன் பிரதிபலிப்புகளை சட்டத்தினையும் நீதியினையும் நிர்வகிக்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளில் அவதானிக்க முடிகின்றது. நீதி மன்றங்களின் அண்மைக்கால தீர்ப்புகள், மனித உரிமை ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகள், குறிப்பாக அரச அடக்குமுறையினை கண்டித்து அறிக்கை வெளியிடுவது, பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிகளை விசாரணைக் குட்படுத்தியுள்ளமை, ராஜபக்~க்களுக்கு எதிரான ஊழல் வழக்குககளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீள ஆரம்பித்துள்ளமை மற்றும் கணக்காய்வாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் என்பன அண்மைய உதாரணங்களாகும். இவை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற கேள்வியினையும் இங்கு முன்வைக்க வேண்டும். தீவிர நிறுவன மறுசீரமைப்புகளின் மூலம் இது சாத்தியமாகலாம். 

அந்தவகையில் காலிமுகத்திடல் போராட்டக்களம் ஆக்கத்திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இத்தகைய போராட்டக் கலாசாரத்தினை நாம் இதற்கு முன்னர் பார்க்கவில்லை. ஆகவே, போராட்ட அனுபவங்களை பெற்றுக்கொள்ள, அதில் பங்களிப்புச் செய்ய ஆயிரக்கணக்கான இலங்கை பிரஜைகள் சகல பேதங்களையும் மறந்து செல்கின்றார்கள். பெரும்பாலானோர் தமக்கென ஒரு அரசியல் அடையாளத்தினை கொண்டவர்கள். 

ஆனால், போராட்டக் களத்திற்கு சென்ற பின்னர் அவற்றை மறந்து பொது நோக்கத்திற்காக போராடுவது ஒரு சிறப்பம்சமாகும். இவையனைத்தும் ஒரு பக்கம் இலங்கையின் உயர் குழாம் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் அரசியலை மறுசீரமைக்க முயற்சிப்பதுடன், மறுப்புறமாக பிரஜைகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ன என்பதனையும் உணர்த்தியுள்ளது. வாக்களித்துட்டு 5 வருடங்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்து விட்டு அடுத்த தேர்தல் இடம்பெறும் போது நித்திரையில் இருந்து வழிக்கும் இலங்கை மக்களுக்கு இந்த போராட்டங்கள் நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. அரசியல்வாதிகள், மக்கள் ஆணையினை துஷ்பிரயோகம் செய்வதற்கும் ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுப்படுவதற்கும் நாட்டில் பிரஜைகளே காரணம் என்பதனை இப்போராட்டங்கள் மீண்டும் நினைவூட்டிவுள்ளன. 

பேராசியர் ஜயதேவ உயன்கொட  கூறுவது போன்று “கோட்டா கோ கம” போராட்டக் களத்தில் வீசும் அரசியல் காற்று இலங்கை பிரஜைகளுக்கு புத்தாக்கத்தினை வழங்கியுள்ளது. ஆகவே தான் நூற்றுக்கணக்கான பிரஜைகள் காலிமுகத்திடலுக்கு அடிக்கடிச் சென்று தம்மை ஊக்கப்படுத்திக் கொண்டும் தாம் ஒரு பிரஜையாக பரிமாற்றம் அடையும் அனுபவத்தினை பெறுகின்றார்கள். 

இவ்வாறான பிரஜைகளின் ஈடுப்பாடு இலங்கையினுடைய ஜனநாயக பொது வாழ்க்கையில் நிரந்தரப் பண்பாகத் தொடரவேண்டும். அதில் எத்தகைய வேற்றுமைகளும் இன்றி சகல சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும். இது இலங்கையில் ஜனநாயகத்தினை மீளுருவாக்கம் செய்வதற்கு உதவும். அதன் மூலம் இலங்கையர்கள் இன, மதவாதமற்ற நாட்டினை, அரசியல் பொறுப்புகூறல், வெளிப்படைத்தன்மையுள்ள, மக்கள் பங்கேற்புடன் கூடிய ஆட்சி மற்றும் சமத்துவமான இலங்கையினைக் கட்டியெழுப்ப முடியும்.  

நிச்சயமாக இது ஒரு நீண்டப்பயணம், புரட்சிகரப்பயணம் - அது கூட்டிணைந்த பயணமாக அமைய வேண்டும். இன்றைய போராட்டங்களின் இறுதி விளைவு  மேற்கூறிய விடயங்களை அடியொட்டியதாக அமையவேண்டும். புதிய அரசியல் கலாசாரத்தினையும், இலங்கையில் மீள் ஜனநாயகமயப்படுத்தலையும் அடைந்துக்கொள்வதற்கான செயற்றிட்டத்தில் இவை அடிப்படையான அம்சங்களாக அமைய வேண்டும்.

மே- 9 சம்பவமானது, பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சியில்லாத இடைக்கால அரசாங்கமொன்று அமைய வேண்டும் என்ற செய்தியினை வெளிப்படுத்தியுள்ளது –ஆர்ப்பாட்டக்காரர்களின் அன்மைக்கால செயற்பாடுகள் இதனை காட்டுகின்றன. ஆகவே, சமகி ஜன பலவேகய மற்றும் மக்கள் விடுதலை முன்னணி வழிநடாத்தும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன பங்குகொள்ளும்  இடைக்கால அரசாங்கத்தினை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பிருக்கலாம். 

ஆனால் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீது பெரியளவிலான நம்பிக்கை இருப்பதாக தென்படவில்லை. அவர் ராஜபக்ஷ குடும்பத்தினை பாதுகாப்பதற்காகவே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம். மறுபுறமாக, படுமோசமான வீச்சியை தழுவிக்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு உயிர் கொடுப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தலாம். 

ரணிலின் நிறைவேறாத அரசியல் அபிலாஷைகளும் இந்தப்பட்டியலிள் அடங்கலாம் (ஜனாதிபதி பதவியினை பரீட்சித்தல், இந்தியா மற்றும் பிரித்தானியாவுக்கு ஒப்பான பாராளுமன்ற அரசாங்க முறை). ஜனாதிபதி பதவி விலகாத நிலையில் பிரதமர் நியமனம் இடம்பெற்றிருப்பது எவ்வகையிலும் போராட்டங்களை கட்டுப்படுத்த உதவாது எனலாம். வருகின்ற நாட்களில் புதிய பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கலாம். 

அது ‘ரணில் கோ ஹோம்;’ என்ற வகையில் அமையலாம். அவரின் இருப்பு மற்றும் கொள்கைகளுக்கான ஆதரவினை திரட்டுதல் என்பன பாராளுமன்றத்திற்குள்ளும் பெரும் சவால் நிறைந்ததாகவே அமையும். இது நாட்டின் உடனடிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தடையாக அமையும். இந்நிலை தொடர்ந்தால் வருகின்ற நாட்களில் சமூக வாழ்க்கையில், ஆளுமை செயற்பாடுகளில், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு அதிகரிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக ஊகிக்கப்படுகின்றது.

இதற்கு தற்போதைய அராஜக நிலையும் காரணமாக இருக்கலாம். இது மிகவும் ஆபத்தானது. தற்போதைய அரசியல் ஸ்த்திரத்தன்மையின்மைக்கு உடனடியான தீர்வுக்காணாவிட்டால் அடக்குமுறைகள் பல வடிவங்களில் வெளிப்படலாம்.

-முற்றும்- 

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா. ரமேஷ்
அரசியல் விஞ்ஞானத்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48