இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஜெனரல் சவேந்திர சில்வா இராஜிநாமா செய்யவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்படவுள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மே மாதம் 31 ஆம் திகதியுடன் இராணுவத் தளபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே  பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை, முப்படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பெறுப்பேற்கவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ தளபதி பதவியிலிருந்து பதவி விலகும் ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக பதவியேற்கவுள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதி இராணுவத்தளபதி பதவியிலிருந்து விலகவுள்ள அவர் , ஜூன் முதலாம் திகதி முதல் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக கடமைகளை பொறுப்பேற்றகவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக கடமையாற்றி வந்த நிலையிலேயே அவர் புதிய நியமனத்துக்கான அலுவலக கடமைகளை பொறுப்பேற்றகவுள்ளதாகவும் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவி விலகலையடுத்து , இராணுவ பதவி நிலை பிரதானி நியமனத்திலிருந்து விலகவுள்ள மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே , ஜூன் முதலாம் திகதி முதல் வகையில் இராணுவ தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டார். கஜபா படையணியிலிருந்து இராணுவத்தளபதியாக நியமனம் பெற்ற முதலாவது இராணுவ அதிகாரி இவர் ஆவார்.

அத்தோடு 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவர் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டதோடு , லெப்டினன் ஜெனரல் தரத்திலிருந்து ஜெனரலாகவும் பதவி நிலை உயர்த்தப்பட்டார். 2020 இல் கொவிட் தொற்று பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் கொவிட் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டு கொவிட் கட்டுப்படுத்தலுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.