Published by T. Saranya on 2022-05-26 13:42:24
ஜப்பானில் நாயாக மாற வேண்டும் என்ற தனது கனவை ரூபாய் 55 இலட்சம் செலவு செய்து நபர் ஒருவர் நிறைவேற்றி உள்ளார்.
ஜப்பான் நாட்டில் உள்ள டோகோ என்ற டுவிட்டர் பயனாளர் ஒருவருக்கு நீண்டகால விசித்திர கனவு ஒன்று இருந்துள்ளது.

அவர் தனது வாழ்க்கையில் நன்றிக்கு எடுத்துக்காட்டாக உள்ள நாய் போன்று உருவம் கொள்ள வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்கான முயற்சியில் இறங்கிய அவர், உண்மையான நாய் வடிவம் கொண்ட உடையை அதற்கான ஜெப்பெட் என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கி ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த நபருக்காக தனித்துவம் வாய்ந்த நாய் வடிவம் கொண்ட உடையை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. அது பற்றிய புகைப்படங்களை டுவிட்டரிலும் பகிர்ந்து உள்ளது. இதன்படி, கோலி இன நாயின் வடிவத்துடன் உடை தயாரானது.

உண்மையான நாய் ஒன்று 4 கால்களுடன் நடப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தும் வகையில் தனித்துவமுடன் அந்த உடை அமைந்தது. இதனை அணிந்து கொண்ட பின்பு அந்த நபர் முழு உருவில் நாய் போன்று காட்சி தந்துள்ளார்.
நான்கு கால்களையும் முன்னும் பின்னும் ஆட்டி, சாய்வாக படுத்து, வாயை அசைத்து கிட்டத்தட்ட நாயை போன்ற செயல்களை செய்து காண்பித்துள்ளார். அது ஒரு மனிதர் என அடையாளம் காண முடியாத அளவுக்கு, நாயின் தோற்றம் வெளிப்பட்டது. இந்த உடையை வடிவமைக்க 40 நாட்கள் ஆகியுள்ளன.
ரூபாய் 55 இலட்சம் செலவிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோ பதிவு டுவிட்டரில் வெளியானது.