(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்துகிறார்கள்.

21 ஆவது திருத்தத்தை மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய நிறைவேற்றாவிடின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாரதுரமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை மக்கள் பிரதிநிதிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (26.05.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை சுதந்திரம்பெற்ற காலத்தின் பின்னரான காலப்பகுதியில் என்றுமில்லாதவாறு தற்போது மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.

ஆட்சியாளர்களின் தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் அத்தியாவசிய சேவைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத அவல நிலைமையை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள மக்கள் அமைதியற்ற முறையில் செயற்படுவதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிகிறது.

மக்களின் உணர்வுகளை எம்மபல் விளங்கிக்கொள்ள முடிகிறது.பொது மக்கள் தற்போதைய சூழ்நிலையில் அமைதியுடன் செயற்பட வேண்டும். அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கும், பொதுச்சொத்துகளுக்கும் சேதம் விளைவிப்பதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

சமூக கட்டமைப்பில் இவ்வாறான தன்மை தோற்றம் பெறும் என்பதை முன்கூட்டியதாக அறிந்ததை தொடர்ந்தே சர்வக்கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினோம்.

இருப்பினும் அரசதலைவர் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காமல் தற்போது மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து நாட்டு மக்கள் அதிக அவதானம் செலுத்தியுள்ளார்கள்.நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு செயற்படும் ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்.

இரட்டை குடியுரிமை விவகாரம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்,மோசடி செய்யப்பட்ட அரச நிதி மிண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும்,பாராளுமன்றத்திற்கு அதிகாரம் கிடைக்கப் பெற வேண்டும்,அரசியல்வாதிகள் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் அதிக அவதானம் செலுத்தியுள்ளார்கள். மக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாரதூரமான எதிர்விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை மக்கள் பிரதிநிதிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.