(எம்.எம்.சில்வெஸ்டர்)

தனியார் பஸ் வண்டிகளுக்கு டீசல் நிரப்பும் போது எரிபொருள் நிரப்புபவர்கள் இலஞ்சம் கோருவதாக அகில இலங்கை தனியார்  பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு  விஜயரத்ன தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த.சாதாரண தர  பரீட்சைகள் முடிவடைந்ததன் பின்னர், போக்குவரத்து சேவையிலிருந்து விலகிக்கொள்ளவுள்ளதாகவும் ‍அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

 "பஸ் வண்டி ஓட்டுவதற்கு போதுமான டீசல் இல்லாத நிலையில் நாம் சில தீர்மானங்களை எடுப்பதற்கு தள்ளப்பட்டுள்ளோம். பஸ் வண்டிகளுக்கு டீசல் பெற்றுக் கொள்ளும்போது, எரிபொருள் நிரப்புபவர்கள் இலஞ்சம் கோருகின்றனர்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் இருக்கத்தக்க, இவ்வாறு அவர்கள் இலஞ்சம் கேட்டுள்ளனர். அத்துடன், நுகேகொடயைில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நான் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருக்கையில் என்னிடடும் 1000 ரூபாவை இலஞ்சமாக கோரியிருந்தனர்.

இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பஸ்களுக்கும் எரிபொருள் நிரப்பித் தருவதாக கூறப்பட்டிருந்தபோதிலும், அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதுள்ளது" என்றார்.

தனியார் போக்குவரத்து பஸ்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான முன்னுரிமை அளிக்காமல் இருக்கும் பட்சத்தில், க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளின் பின்னர் போக்குவரத்து சேவையிலிருந்து விலகிக்கொள்ளவுள்ளதாகவும் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.