ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவமொன்று மஹியங்கனையின் இடம்பெற்றுள்ளது.

மஹியங்கனை - ஹபரவெவ - கிரிமெடில்ல - தம்பராவ ஏரியில் நேற்று (25) பிற்பகல் நீராடச் சென்ற குறித்த மூவருமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதான தந்தை, 15 மற்றும் 10 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நீராடச்சென்ற மூவரும் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அவர்களது ஆடைகள் குறித்த இடத்தில் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து பிரதேசவாசிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் குறித்த மூவரும் ஏரியில் இருந்து மீட்கப்பட்டு மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டது.