( எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யாமை தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கோட்டை நீதிமன்றம் புதன்கிழமை ( 25) உத்தரவிட்டது.
தேசபந்து தென்னகோனை அவர் தற்போது வகிக்கும் பதவியிலிருந்து இடமாற்றுமாறும், அப்பதவியில் அவர் இருப்பது விசாரணைகளை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் கூட அதனை செயற்படுத்தாமை தொடர்பிலேயே இவ்வாறு விளக்கமளிக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டார்.
மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான தாக்குதல்கள் குறித்த வழக்கு விசாரணை புதன்கிழமை ( 25) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது சி.ஐ.டியின் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் சானக டி சில்வா தலைமையிலான குழுவினர் மன்றில் விசாரணையாளர்கள் சார்பில் ஆஜரானதுடன் அவர்கலுக்காக சட்ட மா அதிபர் திணைக்கலத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன தலைமையில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்னாயக்க, சொலிஸிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக, சஜித் பண்டார ஆகியோர் ஆஜராகினர்.
சந்தேகநபர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா, சட்டத்தரணி சானக அபேவிக்ரம, ஜயந்த டயஸ் நாணயக்கார உள்ளிட்டோர் ஆஜராகினர்.
வழக்கை மேற்பார்வை செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அது தொடர்பில் அச்சங்கத்தின் பிரதித்தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட ஆஜரானார்.
அவர் அந்தப் பணிக்கு மேலதிகமாக வன்முறையாளர்களால் தாக்குதலுக்குள்ளான இரு அருட்தந்தையர்கள் தொடர்பிலும் மன்றில் ஆஜரானார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரியன்சி அர்சகுலரத்ன, சரத் ஜயமான்ன, உபுல் ஜயசூரிய, மைத்ரி குணரத்ன, சட்டத்தரணி சுரேன் பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
அய்ஷா ஜினசேன
வழக்கு விசாரணைகள் ஆரம்பித்ததும் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன மன்றுக்கு விடயங்களை முன்வைத்தார். 'பிரதானமாக 3 விடயங்களை இன்றைய தினம் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.
ஏற்கனவே மேலதிக விசாரணை அறிக்கைகள் ஊடாக இந்த விடயத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மேலதிகமாக தண்டனைச் சட்டக்கோவையின் 300 ஆவது அத்தியாயத்தின் கீழான கொலைசெய்ய முயற்சித்தமை தொடர்பிலான குற்றமும் தற்போதைய விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் 4, 5, 6, 7, 8, 9 ஆம் சந்தேகநபர்கள் தவிர ஏனையோர் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்செய்யப்பட்டவர்கள். இவர்களை அடையாளங்காண 48 சாட்சியாளர்களின் பட்டியல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் அல்லது அத்துமீறல்கள் காரணமாகக் காயமடைந்தவர்களின் முழு எண்ணிக்கை 76 ஆகும். அதில் பிரதானமாகக் காயமடைந்த 3 பேரை விசேடமாகக் குறிப்பிடவேண்டும்.
சாலிக அனுரங்க எனும் நபர் தலையில் தாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். இந்துனில் செனரத் பண்டார எனும் அமைதிப்போராட்டக்காரர் மீது மரக்கதிரையொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அத்தாக்குதலை நடத்தும்போது அருகிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக 'அவனை அங்கே கொன்றுபோடுங்கள்' என கூக்குரலிட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரியங்க விஷ்வ எனும் நபரும் இரும்புப்பொல்லால் தலையில் தாக்கப்பட்டுள்ளதுடன் கீழே விழுந்தவுடன் குழுவாகச்சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர்.
இந்த விசாரணைகளில் இதுவரை 454 வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அலரிமாளிகைக் கூட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிவிப்பாளர்கள், 13 இராணுவத்தினர், 10 கடற்படையினர், பொலிஸ்மா அதிபர், இரு உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், 194 சிவிலியன்கள் என அந்தப் பட்டியல் நீண்டது.
சேதமாக்கப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டக்காரர்களின் சொத்துக்கள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொள்ள அரச பெறுமதி மதிப்பீட்டாளரின் உதவி பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிறைக்கைதிகள் அதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது. அதுகுறித்த விசாரணையில் இதுவரையான நிலைவரங்களின் பிரகாரம் வட்டரக்க சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இன்னுமொரு முக்கிய விடயம் விசாரணைகளில் வெளிப்பட்டது. கடந்த 8 ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு உளவுத்துறையினர் ஒரு தகவலை அளித்துள்ளனர். அதாவது 9ஆம் திகதி பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அலரிமாளிகையில் ஒன்றுகூடுவது தொடர்பில் அந்த உளவுத்தகவல் பகிரப்பட்டுள்ளது.
அவ்வாறு கிடைக்கப்பெற்ற உளவுத்தகவலை SD/IG/OUT/S/04/02/1185/2022 எனும் இலக்கத்தின் கீழ் பொலிஸ்மா அதிபரால் மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதில் எவ்வாறு அன்றைய தினம் செயற்படவேண்டும் என்பது தொடர்பில் தெளிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. உரிய பாதுகாப்பு உத்திகளைக் கையாளுமாறும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுவதைத் தடுக்குமாறும் எழுத்துமூலம் விரிவாக பொலிஸ்மா அதிபரால் ஆலோசனை சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசேடமாக 3 கோரிக்கைகளை நீதிமன்றில் முன்வைக்கின்றேன். இந்தத் தாக்குதல் தொடர்பில் பெருமளவானவர்கள் தொடர்புபட்ட நிலையில், 'தனிநபர் முகங்களை அடையாளம் காணல்' எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான நீதிமன்ற உத்தரவொன்றினைப் பெற்றுக்கொள்ள முதல் கோரிக்கையை முன்வைக்கிறேன். அதன்படி மன்றில் இன்று முன்வைக்கப்படும் இறுவட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள காட்சிகளில் இருப்போரை 'தனிநபர் முகங்களை அடையாளம் காணல்' எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காட்ட அரச இரசாயனப்பகுப்பாய்வாளரின் டிஜிட்டல் பகுப்பாய்வுப் பிரிவிற்கு உத்தரவிடுமாறு கோருகின்றேன். (நீதிவான் அதற்கு உத்தரவளித்தார்)
அதே நேரம், அலரி மாளிகையில் குறித்த தினம், அறிவிப்புக்களை செய்த இரு அறிவிப்பாளர்களை குரல் சோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அவர்களில் ஒருவர் அறிவிப்பு செய்யும் போது, காலி முகத்திடலை நோக்கி அங்கிருந்தவர்களை வன்முறையின் பால் தூண்டும் ஒலிப் பதிவுகள் கிடைத்துள்ளன. வசந்த குமார, லலித் மதுமான்ன ஆகியோரே அறிவிப்புக்களை செய்துள்ள நிலையில், அவர்களில் யாரின் குரல் அது என கண்டறிய, அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்கு உத்தரவிடவும் ( உத்தரவு வழங்கப்பட்டது)
அத்துடன் அலரி மாளிளிகை கூட்டம் தொடர்பில் ஒளிப்பதிவுகள் செய்யப்பட்டிருப்பின் அதனை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு, பொது ஜன பெரமுனவின் ஊடக பணிப்பாளருக்கு உத்தரவிடவும் ( அவ்வுத்தரவும் வழங்கப்பட்டது) '
பாதிக்கப்பட்ட தரப்பு :
இதனையடுத்து நீதிமன்றில் பாதிக்கப்பட்ட தரப்பின் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரியன்சி அர்சகுலரத்ன, சரத் ஜயமான்ன, மைத்திரி குணரத்ன உள்ளிட்டோர் விஷேட வாதங்களை முன் வைத்தனர்.
அவர்கள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரைக் கைது செய்யாமை தொடர்பில் கேள்வி எழுப்பினர்.
சாட்சியங்கள் மிகத் தெளிவாக உள்ளதாகவும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 77, 78 ஆம் அத்தியாயங்களின் கீழும் குற்றவியல் சட்டத்தின் 107 ஆம் பிரிவின் கீழும் தேசபந்து குற்றமிழைத்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குறிப்பிட்டார். குற்றவியல் சட்டத்தின் 32 ஆம் அத்தியாயத்தின் கீழ் தேசபந்துவை கைது செய்ய போதுமான சான்றுகள் இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன குறிப்பிட்டார்.
சட்ட மா அதிபரின் விளக்கம் :
இந் நிலையில் சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன கடந்த 16, 22 ஆம் திகதிகளில் சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனைகளில் தேசபந்து தென்னகோன் தொடர்பில் செயற்பட தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாகவும் , அவரை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து மாற்றுமாறு கடந்த 23 ஆம் திகதி சட்ட மா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.'
இதன்போது பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள், சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை தேசபந்து தென்னகோன் விடயத்தில் சி.ஐ.டி.யினரோ, பொலிஸ் மா அதிபரோ செயற்படுத்தவில்லை என்பதை சுட்டிக்கட்டினர்.
இதனையடுத்தே பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவினை பிறப்பித்த நீதிவான், தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யாமைக்கான காரணத்தை அடுத்த தவணை மன்றுக்கு கூற வேண்டும் என உத்தரவிட்டார்.
அத்துடன் எதிர்வரும் வாரத்தில் சி.ஐ.டி.யினர் உரியவாறு செயற்படாவிட்டால், நீதிமன்றம் சாட்சிகளை வைத்து உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டி வரும் எனவும், இதுவரையில் நீதிமன்றின் முன்னால் உள்ள சாட்சிகள் பிரகாரம், தேசபந்து தென்னகோன் வன்முறையை கட்டுப்படுத்த முயலவில்லை என்பதும், வன்முறையாளர்களுடன் சேர்ந்து செயற்பட்டுள்ளதும் தெளிவாவதாக அறிவித்தார்.
இந் நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 பேரில் 1,2,3 மற்றும் 15 ஆம் சந்தேக நபர்களை இன்று அடையாள அணிவகுப்பில் சாட்சியாளர்கள் அடையாளம் காட்ட தவறியதை மையப்படுத்தி நீதிவான் அவர்களுக்கு பிணையளித்தார். இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவர்களை விடுவித்த நீதிவான் அவர்களின் வெளிநாட்டு பயணங்களை தடைச் செய்தார்.
அத்துடன் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் 10,11,12,13,14,16 ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் அதுவரை அவர்களை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
நீதிமன்றின் அருகே பதற்றம் :
சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்த போது, போராட்டக்களத்திலிருந்து கோட்டை நீதிமன்றம் பகுதிக்கு வருகை தந்த பலர் நீதிமன்றத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர். வெளியிலிருந்து வருகை தந்த மேலும் சிலர் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, நீதிமன்ற அதிகாரியொருவர் வருகை தந்து சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படுவதற்காகவே நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கூறினார்.
எவ்வாறாயினும், அங்கிருந்த அனைவரும் அடையாள அணிவகுப்பிற்கு அழைத்துவரப்படவில்லை என்பதை அறிந்துகொண்டதன் பின்னர் மீண்டும் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னரும் அங்கிருந்தவர்கள், தேசபந்துவை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதன்போது, பொலிஸாரின் தலையீட்டுடன் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்த பதற்ற நிலைமை காரணமாக இன்று நீதிமன்றின் பாதுகாப்பு பலபப்டுத்தப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM