அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவிலிருந்து குறித்தொரு தொகை பணம் கழிக்கப்படுவதாகவும், இதனால் வைத்தியர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

Articles Tagged Under: வாசன் ரட்ணசிங்கம் | Virakesari.lk

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திற்கு அப்பால் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவில் குறித்தவொரு தொகை பணம் கழிக்கப்படுவதாக நேற்று சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக சில வைத்தியர்கள் தமக்குரிய மேலதிக கொடுப்பனவில் குறிப்பிடத்தக்களவிலான தொகை கழிக்கப்பட்டிருப்பதாக அவர்களது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கத்திடம் வினவினோம்.

அதற்குப் பதிலளித்த வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம், சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தினார்.

அதன்படி அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவில் குறித்தவொரு தொகை கழிக்கப்படுவதாகவும், அதனால் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரசேவையாளர்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக வைத்தியர்கள், இரசாயன பரிசோதனை ஆய்வுகூட உத்தியோகத்தர்கள், விசேட தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் அம்பியூலன்ஸ் ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் இதனால் பாதிக்கப்படுவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து இன்று புதன்கிழமை திறைசேரியின் செயலாளர் எம்.சிறிவர்தனவுடன் கலந்துரையாடியதாகவும், அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான சுகாதாரத்துறை ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவில் இவ்வாறு குறித்த தொகையைக் கழிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேலும் தெரிவித்தார்.