(எம்.எப்.எம்.பஸீர்)

 

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும், வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹிஷாலினி  உடலில் தீ பரவி உயிரிழந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

ரிஷாத் விடயத்தில் தெரிவுக்குழு அவசியமில்லை" | Virakesari.lk

 

கொழும்பு மற்றும் கோட்டை நீதிமன்றங்களால், இன்றும், நேற்றும் இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

 

ஹிஷாலினி விவகாரம் :

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹிஷாலினி உடலில் தீ பரவி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று ( 24) கொழும்பு மேலதிக நீதிவான்  ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  

இதன்போது அவ்விவகாரத்தில் சந்தேக நபர்களின் பெயர்களாக அடையாளப்படுத்தப்பட்டு பிணையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது மனைவி  உள்லிட்ட அனைவரும் மன்றில் ஆஜராகினர்.

இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்காக ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்,  ரிஷாத் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை தலர்த்த கோரினார்.

 தனது சேவை பெறுநர் சம்பவம் இடம்பெறும் போது, விளக்கமறியலில் இருந்ததாகவும், அவருக்கு எதிராக குற்ரம் சுமத்த சாட்சியங்கள் இல்லாத நிலையில், தொடர்ச்சியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாது விசாரணைகளை இழுத்து செல்வது நியாயமற்றது எனவும் சாட்சி இன்றேல்  சந்தேக நபர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வாதங்களை முன் வைத்தார்.

 இந் நிலையில்,, சந்தேக நபர்களுக்கு எதிராக  குற்ற்ச்சாட்டுக்களை முன் வைப்பதா  என்பது தொடர்பில் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடி, அனைத்து விடயங்களையும் மன்றுக்கு அறிவிக்குமாறு  பொலிசாருக்கு உத்தர்விட்ட நீதிவான், ரிஷாத் பதியுதீனின் வெளிநாட்டு பயணத் தடையையும் நீக்கி உத்தரவிட்டார்.

இவ்வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி  மீண்டும்  விசாரணைக்கு வரவுள்ளது.

 உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல் சம்பவம்  :

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளுக்கு என, கடந்த 2021  ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்  ரிஷாத் பதியுதீன், 2021 ஒக்டோபர் 14 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.  

50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட ரிஷாத் பதியுதீன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. 

இந் நிலையில் இன்று ( 25) அவ்வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது ரிஷாத்தின் சட்டத்தரணிகள் முன் வைத்த கோரிக்கைக்கு அமைய அவரது வெளிநாட்டு பயணத் தடை அடுத்த தவணை வரை தளர்த்தப்பட்டு உத்தரவிடப்பட்டது.