அரச பணியாளர்களை பணிக்கு அழைப்பது குறித்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.

அரச பணியாளர்களை நாளை முதல் கடமைக்கு அழைப்பதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஓன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு நிறுவனத் தலைவர்களை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறித்த அறிக்கையின் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல் மற்றும் எரிபொருள், மின்சாரம், நீர் என்பவற்றுக்கான செலவுகளை குறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்திற் கொண்டு பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமாக தேவைப்படும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டத்தினை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னவினால் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் போது அரச செலவீனங்களை முகாமைத்துவம் செய்வதற்காக மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் கடந்த மார்ச் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தையும் கவனத்தில் கொண்டு செயற்படுமாறும், அத்தியாவசிய அரச சேவைகளை பேணுவதற்கு இது தடையாக இருக்கக் கூடாது என்றும் பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.