(நா.தனுஜா)

அரசியல் குழப்பத்திற்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தை உடனடியாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அதனை அடிப்படையாகக்கொண்டு அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது இவ்வேளையில் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கு யார் காரணம்? அது எவ்வாறு தோற்றம்பெற்றது? என்பதை அனைவரும் அறிவார்கள்.

எனவே இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பது குறித்து மாத்திரமே இப்போது நாம் அவதானம் செலுத்தவேண்டும்.

அதேவேளை அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு சமாந்தரமான முறையில் தீர்வுகாண்பதிலும் அக்கறையுடன் செயற்படவேண்டும்.

ஆகையினாலேயே நாம் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதை முன்னித்திய 4 நிபந்தனைகளை உள்ளடக்கிய கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தோம். 

எனவே அரசியல் குழப்பத்திற்குத் தீர்வுகாணும் வகையிலான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு வெறுமனே வாய்வார்த்தையுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாமல் அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தை உடனடியாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.

அதனை அடிப்படையாகக்கொண்டு அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது இவ்வேளையில் இன்றியமையாததாக இருக்கின்றது.

ஆனால் இதற்குரிய நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்காதவர்களின் அரசாங்கத்தில் எம்மால் பங்காளிகளாக முடியாது என்று தெரிவித்தார். 

அதேவேளை அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியதாவது:

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஏற்றவகையில் எம்மிடமுள்ள வினைத்திறன்மிக்க செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய அவசியம் வந்திருக்கின்றது.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நேரடியான தீர்வைப்பெற்றுத்தரக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். அதற்குத் தகுதிவாய்ந்த திறமையான குழு எம்மிடம் இருக்கின்றது. 

பொருளாதார நெருக்கடிகளுக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்த அரசியல் நெருக்கடிகளை சீர்செய்து, அரசியல் மறுசீரமைப்பின் ஊடாகப் பொருளாதார மறுசீரமைப்பை நோக்கிப் பயணிக்கவேண்டும்.

அதன்படி மக்களின் கோரிக்கைகளையும், அதனை முன்னிறுத்திய போராட்டங்களையும் காட்டிக்கொடுக்காமல், அவர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.