(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் அத்தியாவசிய மருந்து வகைகள் மற்றும் தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் தொடர்பில் துரிதமாக அறிக்கையொன்றிணை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினால் குறுதிய கால, மத்திய கால தீர்வுகளைக் காண்பது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதன்கிழமை (25) இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தவிர இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ள 200 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு டொலர் இன்மையின் காரணமாக , இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இலங்கை ரூபாவில் அதற்கான கொடுப்பனவை செலுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன் போது தெரிவித்தார்.

அத்தோடு பிரான்ஸிடமிருந்து கிடைக்கப் பெறவுள்ள மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகளின் காரணமாக , எதிர்வரும் 90 நாட்களுக்கு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அவசர சத்திரசிகிச்சை பிரிவுகளிலும் தொடர்ச்சியாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன் போது தெரிவித்தார்.

இவற்றுக்கிடையில் ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையும் துரிதமாக மருந்துகளை கொள்வனவு செய்வதில் அவதானம் செலுத்தி வருகிறது. செலவுகளுக்கு தேவையான நடவடிக்கைகளுக்காக ஒளடத கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுயாதீன குழுவொன்றும் இதன் போது நியமிக்கப்பட்டது.
நாட்டில் தற்போது 76 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை தெரியவந்துள்ளது. அத்தோடு உள்நாட்டு மருந்து விநியோகத்தர்களுக்கு 33 பில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.