(என்.வீ.ஏ.)

விம்பிள்டனில் வழங்கப்படும் தரநிலை புள்ளிகளை வாபஸ் பெற்றமை நியாயமற்றது என செக் குடியரசு வீராங்கனை கரோலினா ப்ளிஸ்கோவா கடுமையாக விமர்சித்துள்ளார்.

வலது கையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் உயர்நிலையை அடைவதற்கு முயற்சித்துவரும் கரோலினா ப்ளிஸ்கோவா, தற்போது நடைபெற்றுவரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆரம்ப சுற்றில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

அதன் பின்னரே விம்பிள்டன் தரநிலை புள்ளிகள் வாபஸ் பெறப்பட்டதை அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த வருடம் விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஏஷ்லி பார்ட்டியிடம் 1 - 2 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்த  கரோலினா உப சம்பியனானார்.

இந்த வருடம் விம்பிள்டனில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடி வரும் கிறிஸ்டினாவின் இரட்டைச் சகோதரியான கரோலினா, பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியின் முதலாம் சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை டேசா ஏட்ரியன்யாபிட்ரிமோவை 2 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்டார்.

இந்த வெற்றிக்குப் பின்னர், விம்பிள்டன் தரநிலை புள்ளிகள் வாபஸ் பெறப்பட்டமை குறித்து  அவர்  அதிருப்தியை வெளியிட்டார்.

'இது கடினமானதும் நியாயமற்றதும் மோசமானதுமான தீர்மானமாகும் என்றுதான் நான் நினைக்கிறேன்' என்றார்.

'ஆனால், அது குறித்து எம்மால் எதுவும் செய்ய முடியாது. விம்பிள்டன் சென்று போட்டியிடவேண்டும் என்பதே எனது நோக்கம்.

 அது நிச்சயம். ஏனெனில் நான் புள்ளிகளுக்காகவோ  பணத்திற்காகவோ விளையாடவில்லை. 

நான் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக விளையாடுகிறேன். கடந்த வருடம் சம்பியன் பட்டத்தை அண்மித்த நான் இம்முறை கிண்ணத்தை வென்றெடுக்க வேண்டும் என விரும்புகிறேன்' என்றார்.