(எம்.ஆர்.எம்.வசீம்)

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்து, தேசிய கொள்கை ஒன்றின் கீழ் அமைச்சரவை செயற்படும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். 

அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றின் மூலமே தீர்வு காணமுடியும் என மார்ச் 12 அமைப்பு தெரிவித்தது.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மார்ச் 12 அமைப்பு அரசாங்கத்துக்கு முன்வைத்திருக்கும் யோசனை தொடர்பாக  இலங்கை மன்றக்கல்லூரியில் செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அதன் உறுப்பினர் ராஹன ஹெட்டியாரச்சி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் செயற்படுத்தப்பட்டு 2அரை வருடங்கள் நிறைவடையும் நிலையில் நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளது. 

இதனால் சாதாரண, நடுத்தர மற்றும் அனைத்து தரப்பினரதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. 

அதேபோன்று விவசாயம் உட்பட அனைத்து தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டிருக்கிள்றன. 

இதன் விளைவாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் கிராம மட்டத்தில் இருந்து நகரம் வரைக்கும் அமைதியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 

மக்கள் போராட்டத்தின் விளைவாக பிரமர் உட்பட அமைச்சரை பதவி விலகி, தற்போது புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைக்கப்பட்டிருக்கின்றது.

என்றாலும் போராட்டக்காரர்களின் குரல் தொடர்ந்தும் பல்வேறு பகுதிளிலும் ஒலித்து வருகின்றது. 

தற்போதைய அரசியல் முறைமையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதும் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகும். 

அதனால் எமது மார்ச் 12அமைப்பு பல்வேறு தரப்பினர் மற்றும் புத்திஜிவிகளுடன் கலந்துரையாடி அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளும்போது அதில் உள்ளடக்க சில யோசனைகளை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கி்ன்றோம்.

அந்த வகையில் குறிப்பாக தேசிய கொள்கை அமைப்பதற்கான தேசிய சபை அமைக்கப்படவேண்டும். 

தேசிய கொள்கை அமைப்பு குழுவின் பரிந்ரைக்கு அமையவே அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகள் அமைச்சரவையின் செயற்பாடுகள் அமையவேண்டும்.

தேசிய கொள்கை  குறைந்தபட்சம் 10வருடங்களாவது தொடர்ந்து செயற்படுத்தப்படவேண்டும்.

அத்துடன் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நல்லாட்சிக்கான அடிப்படை நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு தேவையான சட்ட வரைபு அடங்கிய நிறுவன முறைமை அமைக்கப்படவேண்டும். 

அதில் முக்கியமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும். மக்கள் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை  இல்லாமலாக்க முடியுமான மாற்று வழி அமைக்கப்படவேண்டும். அதேபோன்று ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவராக இருப்பதை திருத்தம் செய்து பிரதமருக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவேண்டும்.

அத்துடன் தற்போதைய அரசியலமைப்பில் ஜனாதிபக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டு, ஜனாதிபதி உட்பட அனைத்து பிரஜைகளும் சட்டத்தின் ஆட்சிக்கு கீழ் படியவேண்டும். 

அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டு அதில் சிவில் அமைப்பின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். 

அதில் சபாநாயகர், பிரதமர் எதிர்க்கட்சித் தலைர் அங்கத்தவராக இருந்து ஏனைய 7உறுப்பினர்களும் சிவில் அமைப்பைச்சேர்ந்தவாக இருக்கவேண்டும்.

அதேபோன்று அமைச்சரவை 20க்கு அதிகரிக்காமல் இருப்பதுடன் இராஜாங்க மற்றும் அமைச்சரவை அல்லா அமைச்சர்கள் நியமிப்பதை இல்லாமலாக்கவேண்டும். 

திணைக்கள பிரதானிகளை நியமிக்கும் அதிகாரம் அமைச்சரவையில் இருந்து நீக்கி, அரச சேவை ஆணைக்குழுவுக்கு வழங்கவேண்டும். 

அரச சேவைக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்ளும்போதும் அரச சேவை ஆணைக்குழு ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு இன்னும் பல யோசனைகளை அரசாங்கத்துக்கு முன்வைக்க இருக்கின்றோம். அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார அரசியல பிர்சசினைக்கு தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றின் மூலமே தீர்வுகாண முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும். 

அவ்வாறு இல்லாமல் பாராளுமன்றத்தில் ஒரு சிலருக்கு அமைச்சு பதவி வழங்கி, அரசாங்கம் அமைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்றார்.