வரலாற்றில் இலங்கை எதிர்கொள்ளாத இந்த நெருக்கடி பற்றி பல்வேறு கருத்தாடல்கள் உள்ளன. நாளைய நிலைவரத்தை தீர்மானிக்க முடியாத ஒரு நிலையில் மக்கள் உள்ளனர். அரசாங்கத்தின் கையை மீறி பிரச்சினை செல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றமை யாரும் எதிர்பார்க்காத ஒன்று. 

சரி, பிரதமராக ரணில் பதவியேற்றதால் நடக்கப் போவது என்ன? ஜனாதிபதி கோட்டா தலைமையில் இடம்பெற்ற பொருளாதார சீர்த்திருத்தம் என்ன? அது எந்தளவு தாக்கம் செலுத்தும்? இனி ரணில் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை என்ன என்பதை இலங்கை மட்டுமல்ல, உலக நாடுகளும் பார்த்துக்கொண்டிருக்கின்றன. மக்களுக்கு நிவாரணம் வழங்க ரணிலால் முடியுமா? 

இலங்கை உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் உலக வரி அளவீடுகள் தொடர்பாக ஆராயும் taxsummaries.pwc.com ஆகியவற்றின் தரவுகளை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்னரான ஆட்சியில் தனிநபர் வியாபார நடவடிக்கையின் போது, வருடாந்த வருமானம் 7 இலட்சமாக காணப்பட்டால் அதற்கு வரி செலுத்தவேண்டிய அவசியம் காணப்படவில்லை. அதற்கு மேலதிகமாக பெறும் வருமானத்திற்கு வரிசெலுத்தவேண்டிய நிலை காணப்பட்டது. உதாரணமாக, 8 இலட்சம் வருமானம் பெற்றால் 100,000 வரிசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டது. 

அடுத்தாக, ஒருவருக்கு மாதாந்த ஊதியம் 100,000இற்கு அதிகமாயின், அவர் வரிசெலுத்த வேண்டும். அதாவது அவரது வருடாந்த ஊதியம் 12 இலட்சத்தை தாண்டும்போது அவர் வரிசெலுத்தவேண்டியிருந்தது. 

அனைத்து வகையான சேமிப்புகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 5 வீதம் வரி செலுத்தவேண்டி இருந்தது. 

நபர் ஒருவரின் மாதாந்த ஊதியம் 75ஆயிரம் ரூபாவாகவும், சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் 30ஆயிரம் ரூபாவும் கிடைக்கின்றதென வைத்துக்கொள்வோம். அவரது வருடாந்த வருமானம் 12 இலட்சத்தை தாண்டுவதோடு, வரிசெலுத்தும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

மூத்த பிரஜைகளுக்கு இந்த வரிவிதிப்பு விதிவிலக்காக காணப்பட்டது.  

அடுத்ததாக, மாதாந்தம் 300,000 ஊதியம் பெறும் ஒருவரை எடுத்துக்கொண்டால், அவரது வருடாந்த வருமானம் 36 இலட்சம். அவருக்கு முதல் 12 இலட்சத்திற்கு வரிவிலக்கு உண்டு. அவரது வருடாந்த வருமானத்தில் 12இலட்சத்திலிருந்து 18 இலட்சம் வரை, அதாவது 12 இலட்சத்தை தாண்டி வரும் முதல் 6 இலட்சத்திற்கு ஒரு வரி வீதமும் 18-24 இலட்சம் வரை அதனை விட அதிக வரி வீதமும் என வரிவீதம் கூடிக்கொண்டே சென்றது.  

இந்த நடைமுறையின் கீழ் கோட்டா ஆட்சிக்கு முன்னரான காலத்தில் வரி வருமானம் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி பீடம் ஏறிய பின்னர், இந்த வரிவருமானத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அதாவது, 12 இலட்சம் என காணப்பட்ட வரிவிதிப்பு எல்லையானது, 30 இலட்சமாக மாற்றப்பட்டது. இதுவரை நாம் பார்த்த எந்தவொரு வரி வருமானமும் இலங்கைக்கு கிடைப்பது மிகவும் குறைவு. தனிநபர் தொழில்முயற்சியால், மாதாந்த ஊதியம், சேமிப்புகளுக்கான வட்டி வருமானம் என எதுவாக இருந்தாலும் 30 இலட்சம் வரை அவர்களுக்கு வரிவிலக்கு உண்டு. 

உதாரணமாக, இப்போது வரி செலுத்துகை இன்றி 250,000 ரூபாய் வரை ஒருவர் மாதாந்த ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம். முன்னர் வரிசெலுத்தியவர்கள் இப்போது அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இப்போது, 30 இலட்சத்திலிருந்து 60 இலட்சம் வரை வருடாந்த வருமானத்திற்கு வெறும் 6 வீதம் மாத்திரமே வரிவிதிக்கப்படுகின்றது. அடுத்த 30 இலட்சத்திற்கு அதாவது 90 இலட்சம் வரை வருடாந்த வருமானம் பெறுபவருக்கு 12 வீதம் வரி விதிக்கப்படுகின்றது. 

இதற்கு மேலதிகமாக வீட்டுக்கடன் பெற்றிருந்தால், அதற்கு நாம் செலுத்தவேண்டிய வட்டித் தொகையை கழித்து வரிசெலுத்த முடியும். உதாரணமாக, மாதாந்தம் 30 ஆயிரம் வரிசெலத்த வேண்டுமென வைத்துக்கொள்வோம். வீட்டுக்கடனுக்கு மாதாந்தம் 10ஆயிரம் வட்டி செலுத்த வேண்டும் என வைத்துக்கொள்வோம். இந்த 10ஆயிரத்தை கழித்து 20 ஆயிரத்தை வரியாக செலுத்தலாம். வீட்டிற்கு சூரிய கலம் பொருத்தப்பட்டால், அதற்கான முழு தொகையையும் வரித்தொகையில் குறைத்துக்கொள்ள முடியும். ஆயுள் காப்புறுதி பெற்றிருந்தால், அதற்கு செலுத்தவேண்டிய தொகையை வரித்தொகையில் கழித்துக்கொள்ள முடியும். பிள்ளையின் பாடசாலை செலவீனங்களையும் வரி தொகையில் கழிக்க முடியும். வரி வருமானம் எந்தளவு குறைந்துள்ளதென இப்போது தெளிவாகின்றது. 

இதற்கு மேலதிகமாக கொவிட் காலத்தில் மக்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க பணத்தை அச்சிட்டனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நாட்டில் பணத்தை அச்சிடுவதானது அதன் பெறுமதியை இழக்கச்செய்யும் என்பது அடிப்படையாகும். இதனடிப்படையில் ரூபாயின் பெறுமதி உடனே வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. இதன்போது நாம் டொலருக்கு செலுத்தவேண்டிய தொகை அதிகமானது. ஏற்றுமதி சந்தையின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. மறுபுறம் டொலரின் பெறுமதி அதிகரித்தது. இது எரிபொருளுக்கு செலுத்தவேண்டிய தொகையில் நேரடியாக தாக்கம் செலுத்தியது. போக்குவரத்து செலவீனம் அதிகரித்தவுடன் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்தது. இப்போதைய நிலை இதுதான். 

தற்போது ரணில் மீண்டும் வரி வருமானத்தை அதிகரிக்க சாத்தியமுண்டு என்பது கடந்த கால வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு அனுமானிக்கலாம். காரணம், அவரது ஆட்சிக்காலத்திலும் சரி, கோட்டாவிற்கு முன்னரான ஏனைய ஆட்சிக்காலங்களிலும் இந்த முறை காணப்பட்டது. வரி வருமானத்தை எப்படி அதிகரித்தாலும், டொலரின் பெறுமதியை மாற்றியமைக்க முடியாது. சிறியளவான மாற்றத்தையே காண முடியும்.

இத்தனை காலமும் நாட்டின் சொத்துக்களை விற்றே டொலர்களை பெற்றுக்கொண்டனர். இதற்கு பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றபோதும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. 

இல்லாவிட்டால், எமது பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். அதனை விற்று டொலர்களை பெற்றுக்கொள்வதென்பது, உடனடியாக நடக்கக்கூடிய ஒன்றல்ல. இதற்கு பல வருடங்கள் செல்லலாம். 

உள்நாட்டு உற்பத்தி, குறிப்பாக விவசாயத்தை ஊக்குவிப்பது பற்றி பிரதமர் தனது பாராளுமன்ற உரையிலும் குறிப்பிட்டார். மானிய அடிப்படையில் உரத்தை அதாவது 10 ஆயிரம் ரூபாவிற்கு வழங்குவதற்கு பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு முன்னர், 1,500 ரூபாய் மானிய விலை அடிப்படையில் உரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், வருமானத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் பெற்றுக்கொள்ளாத விவசாயிகள், 10 ஆயிரம் ரூபாவிற்கு உரத்தை பெற்றுக்கொள்வது எந்தளவு சாத்தியம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அவ்வாறே பயிர்செய்கையில் ஈடுபட்டாலும், அவை உள்நாட்டு தேவையை பூர்த்திசெய்யுமே தவிர, டொலர் பெறுமதியில் பெரிதாக தாக்கம் செலுத்தாது.

இலங்கையின் பிணைமுறிகளின் முதலீடு செய்யுமாறு அமெரிக்காவின் முதலீட்டு வங்கியான ஜே.பி.மோர்கான், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பரிந்துரைத்துள்ளமை ஒரு விசேட அம்சமாகும். எனினும், இலங்கையின் நெருக்கடியை கருத்திற்கொண்டு எத்தனை பேர் அதற்கு முன்வருவார்கள் என்பது கேள்விக்குறியாகும். 

ஒருபுறம் எரிபொருள் தட்டுப்பாட்டால் எங்கும் வரிசைகளும் போராட்டங்களும் தினமும் இடம்பெறுகின்றன. மறுபுறம் மக்கள் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றனர். இதனை சமாளிக்க புதிய பிரதமர் எடுக்கப்போகும் ஆயுதம் என்ன? 

கலாவர்ஷ்னி கனகரட்ணம்