ஆணையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு  கையளிக்கப்படவுள்ளது. நாடுபூராகவுமுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந்தப் புகையிரத நிலையம் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் மத்தியில் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டே இப்புகையிரத நிலையம் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் புனர்நிர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்காக நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் இரு வாரகாலம் நிதி சேகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த தினங்களில் மாணவர்கள் தமது செலவுக்காக கொண்டு வந்த பணத்தில் நாளொன்றுக்கு தலா இரண்டு ரூபாவை அன்பளிப்பு செய்தனர். அத்துடன் ஆசிரியர்கள் நாள் ஒன்றுக்கு 10 ரூபா அன்பளிப்பு செய்துள்ளனர்.

எனவே 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஆணையிறவு புகையிரத நிலையத்திற்கு 10.54 மில்லியன் ரூபா நிதி பாடசாலைச் சமூகத்ததால் வழங்கப்பட்டுள்ளது.  ஏனைய நிதியினை கல்வியமைச்சு ஒதுக்கீடு செய்திருந்தது.

ஆகவே இன்று அநுராதபுரத்திலிருந்து பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் புகையிரதமும் யாழ்ப்பாணத்திலிருந்து பாடசாலை மாணவர்களை அழைத்து வரும் புகையிரதமும் ஆணையிறவு புகையிரத நிலையத்தில் தரிக்கப்பட்டு மு.ப. 11.58 மணிக்கு புகையிரத நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், போக்கவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

- நிபோஜன், எம்.சி.நஜிமுதீன்