(நெவில் அன்தனி)

உஸ்பெகிஸ்தானில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஏ எவ் சி ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ள இலங்கை கால்பந்தாட்ட அணி கத்தாரில் விசேட பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றது.

33 வீரர்களும் 16 பயிற்சிக் குழாம் உறுப்பினர்களும் கத்தார் பயணமாகினர்.

இதேவேளை, இங்கிலாந்தில் வசித்துவரும் டிலொன் டி சில்வா, இன்னும் ஓரிரு தினங்களில் இலங்கை அணியினருடன் கத்தாரில் இணையவுள்ளார்.

இலங்கையின் நட்சத்திர வீரர்   வசீம் ராசீக் தற்போது இந்தியாவின் கோகுலம் கேரளா எவ்சி  கழகத்துக்காக விளையாடிவருகிறார்.

அவரது பெயர் இலங்கை குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர் இலங்கை அணியுடன் இணைவாரா இல்லையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படாத நிலையில் ஏற்கனவே இலங்கை அணியில் இடம்பெற்ற வீரர்களுடன் ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

கத்தாரில் பயிற்சிபெறும் வீரர்களில் 23 வீரர்கள் உஸ்பெகிஸ்தான் செல்வதுடன் மற்றைய 11 வீரர்களும் 4 அதிகாரிகளும் நாடு திரும்புவர்.

கத்தார் கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கத்தார், அஸ்பயர் கால்பந்தாட்ட பயிற்சிகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை வீரர்களுக்கு கத்தாரில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

கத்தார் புறப்படுவதற்கு முன்னர் சுப்பர் லீக் மற்றும் சம்பியன்ஸ் லீக் காலப்நதாட்டப் போட்டிகளில் விளையாடும் ஆபிரிக்க வீரர்களைக் கொண்ட அணியுடன் இலங்கை காலப்நதாட்ட அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடியது.

அந்த இரண்டு போட்டிகளும் இலங்கை  அணிக்கு சாதகமாக அமையவில்லை.

எனினும், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கு இலங்கை அணி சவாலாக விளங்கும் என தலைமைப் பயிற்றுநர்  அண்ட்றூ  மொறிசன் தெரிவித்தார்.

ஆபிரிக்க வீரர்களுடனான போட்டியில் இலங்கை வீரர்கள் கடுமையான பிரயாசத்துடன் விளையாடியமை திருப்தி தருவதாக அவர் குறிப்பிட்டார்.

'எவ்வாறாயினும் ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றில் இதனைவிட சிறந்த நுட்பங்களுடனும் ஆக்ரோஷத்துடனும் இலங்கை வீரர்கள் விளையாடவேண்டிவரும்.

எதிரணிகள் எம்மை விட பலம் வாய்ந்தவை என்பதால் தடுத்தாடும் உத்தியையே நாம் கையாள்வோம். எனினும் போட்டிகளின் தன்மைக்கேற்ப எதிர்த்தாடும் உத்தியைப் பிரயோகிக்கவும் தயாராகவுள்ளோம். மாலைதீவுகளுடனான போட்டியில் இந்த நுட்பத்தைப் பின்பற்ற எண்ணியுள்ளோம்.

ஆறு நாட்களில் 3 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளதால் இலங்கை வீரர்கள் சிரமங்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

எனினும் எதிரணிகளின் பலத்துக்கு ஈடுகொடுத்து விளையாட எமது வீரர்கள் முயற்சிப்பார்கள் என நான் நம்புகின்றேன்' என்றார்.

உஸ்பெகிஸ்தானை ஜுன் 8ஆம் திகதி எதிர்த்தாடவுள்ள இலங்கை, 11ஆம் திகதி மாலைதீவுகளையும் 14ஆம் திகதி தாய்லாந்தையும் சந்திக்கவுள்ளது.

இலங்கை  காலப்நதாட்ட  குழாம்

சுஜான் பெரேரா (தலைவர்), ரீ. கஜகோபன், அசிக்கூர் ரஹுமான், சரித்த ரட்நாயக்க, ஹர்ஷ பெர்னாண்டோ, சலன சமீர, மொஹம்மத் பஸால், மொஹமத் ஆக்கிப், கவீஷ் லக்ப்ரிய, ப்ரபாத் அருணசிறி, சமோத் டில்ஷான், அப்துல் பாசித், மொஹமத் பயாஸ், செபமாலைநாயகம் ஜூட் சுபன், மரியதாஸ் நிதர்சன், மொஹமத் முர்ஷித், சத்துரங்க மதுஷான், நுவன் கிம்ஹான, எஸ். ஜேசுதாசன், ரி. கிளின்டன், மொஹமத் ஷபீர், ராசிக் ரிஷாத், டிலிப் பீரிஸ், அபீல் மொஹமத், மொஹமத் ஷிபான், ஷெனால் சந்தேஷ், லசித்த பெர்னாண்டோ, சசங்க டில்ஹார, மொஹமத் அமான், மொஹமத் ஹஸ்மீர், தரிந்து தனுஷ்க, வின்சன்ட் கீதன், மொஹமத் முஸ்தாக்.

தலைமைப் பயிற்றுநர்: அண்ட்றூ மொறிசன், உதவிப் பயிற்றுநர்: கீத் ஸ்டீவன்ஸ், இடைக்கால உள்ளூர் பயிற்றநர்: மொஹமத் ஹசன் ரூமி, உள்ளூர் உதவிப் பயிற்றுநர்கள்: இராஜமணி தேவசகாயம், மொஹமத் ரட்னம் ஜஸ்மின், கோல்காப்பாளர் பயிற்றுநர்: பி.வி.எஸ்.பி. தயவன்ச, உடற்தகுதி ஆலோசகர்: மார்க்கஸ் பெரெய்ரா.