கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் விடயத்தில் இந்தியாவை ஒப்பிடும்போது சீனா தோல்வியடைந்துள்ளது. மேலும் சர்வாதிகார போக்கில் செயல்படும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மத்தியில் ஜனநாயக முறையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க  ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் ஒன்றிணைந்து குவாட் அமைப்பில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் குவாட் உச்சிமாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பென்ஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பல்வேறு  விடயங்கள் குறித்து பேசினர். இந்தோ பசிபிக் பிராந்திய  பாதுகாப்பு  தொடர்பில் கூடுதல் அவதானம் இதன் போது செலுத்தப்பட்டது. அதே போன்று குவாட் தலைவர்கள் தனித்தனியே சந்தித்து தங்கள் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடிய போது, வர்த்தகம், முதலீடு, உலகளாவிய பிரச்சனைகள் குறித்து கவனத்தில் கொண்டனர். இந்திய  - அமெரிக்க கூட்டு நட்புறவு நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு வலுவாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விடயத்தில் இந்தியா ஜனநாயக முறையில் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது. சீனா, இந்தியா ஏறக்குறைய மக்கள் தொகையில் இணையானதாக உள்ளன. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த கையாண்ட விதத்தில் இந்தியாவை ஒப்பிடும்போது சீனா தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் ஜனநாயக முறையில் எதை வேண்டுமானாலம் சாதிக்கலாம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி  உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சர்வாதிகார போக்கால் மட்டுமே உலகை சிறப்பாக கையாள முடியும் என சீனா, ரஷ்யா செயல்பட்டு வரும் நிலையில் அந்த நம்பிக்கையை இந்தியா முற்றிலுமாக சிதைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

அதே போன்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா  குறிப்பிடுகையில், குவாட் அமைப்பின் தடுப்பூசி விநியோகத்துக்கு இந்தியா பங்களிப்பு செய்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு   அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இக்கட்டான சூழலில் இந்தியா சார்பில் ஏராளமான நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கருத்தியல் சார்ந்த விவாதத்தில் வெற்றி பெறுவதை விட இத்தகைய செயல் மூலம் கிடைக்கும் வெற்றி மிகவும் மதிப்புமிக்கதாக தெரிவித்தார்.