காலி முகத்திடலில் ஒரு மாத காலத்துக்கு மேலாக இடம்பெற்றுவரும் ‘கோட்டா கோ கம’ தன்னெழுச்சி போராட்டம் இலங்கையின் சமூக -அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகக் காணப்படுகிறது.

சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் இத்தகையதொரு மக்கள் எழுச்சி இடம்பெற்றதாக ஆதாரங்கள் இல்லை. இந்தப் போராட்டங்கள் இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பில் அடிப்படையான மாற்றங்களை கோரி நிற்கின்றன. 

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு ஆளுகை கட்டமைப்பில் (Governance structures) தொடர்ச்சியாக நிலவி வந்த குறைப்பாடுகள் மற்றும் பலவீனமான ஆளுமை மிக முக்கிய காரணமாக அமைந்திருப்பதனை போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக முழக்கமிட்டு வருகின்றனர்.   

இந்தப்போராட்டங்கள் இலங்கையின் ஜனநாயகத்துக்கு புதியப் பரிணாமத்தினை வழங்கியுள்ளது என்று வாதிட முடியும். காரணம், ஜனநாயகம் என்பது உயர்குழாம் அரசியலை அல்லது அரசியல் கட்சிகளை அடியொட்டியே இதுவரைக்காலமும் விவாதிக்கப்பட்டது. 

குறிப்பாக ஜனநாயகம் மேல்தட்டு வர்க்கத்தின் விருப்பங்களையே வெளிப்படுத்தியுள்ளது என்ற விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. இதற்கு,இலங்கையின் பிரதிநிதித்துவ ஜனநாயகமும் முக்கிய காரணமாகும். 

ஆனால் இன்றைய போராட்டங்கள் ஊடாக ஜனநாயகம்  மக்கள் மயப்படுத்தப்பட்டிருப்பதனையும்,  தன்னார்வ மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் இன்று ஜனநாயகத்திற்குப் புதிய வடிவத்தை வழங்கி  இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இது நாம் இதுவரைக் காலமும் கோட்பாட்டு ரீதியாக நோக்கிய ஜனநாயகத்தில் இருந்து முற்றாக வேறுபட்டுள்ளது. 

ஆகவே இப்புதிய கோலங்களை எதிர்காலத்தில் ஆய்வுக்குட்படுத்துவது ஜனநாயகம் தொடர்பான அறிவுத்தொகுதிக்கு பங்களிப்பு செய்வதாக அமையும். 

காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டங்களின் நடைமுறைகள், ஒழுங்குகள், அதில் காணப்படும் ஒழுக்கம் அல்லது கட்டுப்பாடு அல்லது பரஸ்பர மரியாதை, பன்மைத்துவத்துக்கு மதிப்பளித்தல், பெண்களுக்கான பாதுகாப்பு போன்ற காரணிகள்  ஜனநாயக போராட்டங்கள் குறித்த சித்தாந்தத்தினை மீள்கற்பனை செய்வதற்கும், புதிய சட்டகத்துக்குள் இருந்து ஜனநாயகத்தினை நோக்குவதற்குமான ஒரு பரந்த வாய்ப்பினை வழங்கியுள்ளது. 

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஜனநாயகத்தின் மீது பெரும் தாக்குதல் இடம்பெற்று விட்டது போன்ற பெரும் அச்சத்தினை அரசியல் அவதானிகளும், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் முன்வைத்தனர்.

அதனை ஒப்புவிக்கும் வகையில் பதவிக்கு வந்த உடன் பல ஜனநாயக விரோத, பல்லினம் மற்றும் பல்கலாசாரத்தினை அலட்சியம் செய்யும் வகையிலான செயல்களை மேற்கொண்டார் என்பது யாவரும் அறிந்த விடயம். 

ஆயினும் அவை தற்போது தலைகீழாக மாறியுள்ளதுடன், உண்மையான ஜனநாயகத்தினை, ஜனநாயக எழுச்சியினை, குறிப்பாக அடிமட்டத்தில் ஜனநாயகம்  எழுச்சி பெற்று வருவதனை இந்த ஆட்சியின் கீழ் நாம் காணுகின்றோம். இந்நிலை முன்னர் ஒருபோதும் இடம் பெற்றதற்கு ஆதாரங்கள் இல்லை. 

அந்தவகையில் இக்கட்டுரையானது காலிமுகத்திடல் உட்பட நாட்டின் ஏனையப் பாகங்களில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்கள் மூலம் இலங்கைப் பிரஜைகள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் என்ன, இலங்கை தேசத்தினை மற்றும் அரசினைக் கட்டியெழுப்புவதில் கடந்தகாலங்களில் விடப்பட்ட தவறுகளை எவ்வாறு சரி செய்வது மற்றும் இப்படிப்பினைகளை புதிய இலங்கை தேசத்தினைக் கட்டியெழுப்புவதற்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் அகிய விடயங்களை ஆராய முற்படுகின்றது. 

முக்கியமாக, இக்கட்டுரையானது ஒரு பக்கம், நாட்டில் அரசாங்கமில்லாத, மிகவும் பலவீனமான, ஆளுகை செய்வதற்கான இயலுமையினை முற்றாக இழந்துள்ள, தோல்வியடைந்த அரசொன்று உருவாகியுள்ள சூழ்நிலையிலும், மறுபுறமாக, இலங்கை சமூகம் மிகத் தீவிர பாதுகாப்பு மயமாக்கம் மற்றும் இராணுவமயமாக்கத்திற்கு உள்ளாகி வரும் பின்புலத்திலேயே எழுதப்படுகின்றது.

போராட்டங்களின் பின்புலம்

இலங்கையர்கள் சுமார் 90ஆண்டுகாலம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை அனுபவித்து வந்தாலும், மக்கள் இன்னும் ஜனநாயகத்தின் பெறுமதியினை உள்ளார உணரவில்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாகவே முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. 

இதற்கு சுதந்திரத்திற்குப் பின்னர் இடம்பெற்று வந்துள்ள ஜனநாயகத்துக்கு எதிரான சம்பவங்கள் முக்கிய பங்களிப்பினை செலுத்துகின்றன.  முக்கியமாக, இலங்கையர்கள் போராட்டம் செய்து சுதந்திரத்தினைப் பெற்றுக் கொள்ளவில்லை. 

அதனால் ஜனநாயக விழுமியங்களின் பெறுமதிகளை அலட்சியம் செய்து சர்வாதிகார ஆட்சியாளர்களை, குடும்ப ஆட்சியினை ஊக்குவிக்கிறார்கள் என்ற விமர்சனம் ஜனநாயகத்தை நேசிக்கும் தரப்பினர்களால் தொடர்ச்சியாகவே முன்வைக்கப்பட்டது. 

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு வினைத்திறனற்ற கடன் முகாமைத்துவம், தவறான பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதி கொள்கைகள், ஊழல் மோசடிகள் மற்றும் பலவீனமாக ஆளுகை (Weak governance) என்பவற்றிற்கு அப்பால், பெரும்பான்மை மக்கள் தொடர்ச்சியாக சர்வாதிகார மற்றும் குடும்ப ஆட்சியினை விரும்பி ஏற்றுக்கொண்டமை மற்றும் அவர்கள் பின்பற்றிய தீவிர தமிழ் முஸ்லிம் எதிரப்புக் கொள்கையினை நிபந்தனையற்று ஏற்றுக்கொண்டமை என்பன மிக முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என்று சுவிடன் நாட்டில் அமைந்துள்ள உப்சலா பல்கலைக்கழகத்தில் (Uppsala University) சமாதானம் மற்றும் மோதல் கற்கைகள் துறையின் பேராசிரியர் அசோக் ஸ்வைன் (Ashok Swain) தமது டுவிட்டர் பதிவில் அண்மையில் குறிப்பட்டிருந்தார். 

ஆகவே, ராஜபக்ஷ குடும்பத்தினர் மகா சங்கத்தினருடன் இணைந்து கையாண்டு வந்த தீவிர ‘சிங்கள பௌத்த தேசியவாதமும்’ நாட்டின் இன்றைய வங்குரோத்து நிலைக்குக் காரணமென வாதிட முடியும். ஆனால் இன்று நடைபெறுகின்ற போராட்டங்கள் இளைஞர்களை மையப்படுத்தியதாக, குறிப்பாக கோட்டாபயவுக்கு வாக்களித்த  இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகள் ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பதும், அதன் பெறுமதியைப்  புரிந்துகொண்டு செயற்படுவதும் புதிய இலங்கை தேசத்தினை நோக்கியப் பயணத்தின் ஆரம்பமாக தென்படுகின்றது. 

இந்தப் போராட்டங்களில் பல்வேறு  வகுப்பினரை நாம் அவதானிக்க முடியும். படித்த மத்திய தர வர்க்கம், நகர்புற இளைஞர் யுவதிகள், கிராமிய இளைஞர் யுவதிகள்  விவசாயிகள்,  தொழில் வல்லுனர்கள், ஆசிரியர் சமூகம், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்ககள், அரச அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் என  பல்வேறு தரப்பினரும் பங்கெடுத்து வருகின்றனர். 

யாவரையும் உள்வாங்கும் வகையிலான இத்தகைய போராட்டங்கள்  இலங்கை வரலாற்றில் இதுவரை இடம்பெறவில்லை எனக் குறிப்பிடமுடியும்.  ஆயினும் கடந்த கால போராட்டங்களான 1970, 1987 மற்றும் 1989 களில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் போராட்டம் என்பவற்றில்  இளைஞர்களே தலைமைத்துவத்தை வழங்கினார்கள். 

ஆயினும் அவை ஒரு  குறிப்பிட்ட இனத்தினை மற்றும் வகுப்பினரை மையப்படுத்தியதாகவே காணப்பட்டன.  அவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இந்தப் போராட்டம் காணப்படுகின்றமை இலங்கை வரலாற்றில் ஒரு சிறப்பம்சமாகும். இன்றைய போராட்டங்களுக்கு சுதந்திரத்துக்குப் பின்னர் மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை, அபிலாசைகளை  அலட்சியம் செய்தமை, மக்கள் ஆணையினை துஷ்பிரயோகம் செய்தமை போன்ற பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. 

மாட்டின் லூதர் கிங், “போராட்டங்கள் அல்லது கிளர்ச்சிகள் மக்களின் குரல் மழுங்கடிக்கப்படுகின்ற பொழுது அல்லது  அலட்சியம் செய்யப்படுகின்ற பொழுது எழுச்சி பெறுகின்றது எனக் குறிப்பிடுகின்றார். 

இத்தகைய போராட்டங்கள் இடம்பெறுவதற்கு பிறிதொரு காரணமும் உள்ளது. மக்கள் பொது ஒப்பந்தத்தின்  ஊடாகவே ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறார்கள். இக்கருத்தினை புகழ்பெற்ற அரசியல் சிந்தனையாளர்களான ஜோன் லொக், தோமஸ் ஹாப்ஸ் மற்றும் ரூசொ என்போர்கள் 16, 17 மற்றும் 18ஆம் நுற்றாண்டுகளில் முன்வைத்தார்கள்;. 

இக்கருத்து இன்றும் வலிதாகும் என்பதில் ஐயமில்லை. இங்கு சமூக ஒப்பந்தம் என்பது தேர்தலை குறித்து நிற்கின்றது. மக்கள் தமது ஆணையை ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு அல்லது தரப்பினருக்கு தம்மை ஆள்வதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வழங்குகிறார்கள். 

பொதுநம்பிக்கை (Public trust) என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே இவ்வொப்பந்தம் செய்யப்படுகின்றது. இவ்வொப்பந்தத்தினை ஆட்சியாளர்கள் மீறும்போது, அவர்கள் மக்கள் வழங்கிய ஆணையிகை மீறும் பொழுது, பொதுமக்கள் எதிர்ப்பினை தெரிவிப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது பொதுவான நடைமுறையாகும். 

இதனை உலகில் பல பாகங்களில் காணமுடியும். இத்தகைய போராட்டங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. இன்று மியன்மார், மத்திய கிழக்கு மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளில் இடம்பெறுவதும் இத்தகைய போராட்டங்களே ஆகும். இலங்கையில் இடம்பெறும் போராட்டங்களும் வெளிப்படுத்துவது யாதெனில் அரசாங்கம் தாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை மீறியுள்ளது என்பதனையாகும். 

கோட்டாபய அரசாங்கம் “தேசிய பாதுகாப்பு’ ‘தேசிய பொருளாதாரம்", “ஊழலற்ற ஆட்சி, வல்லுனர்களின் ஆட்சி" மற்றும் “ஒரே நாடு ஒரே சட்டம்" ஆகியவற்றைத் தமது பிரதானக் கொள்கைகளாக முன்வைத்தது. அதற்கான மக்களின் ஒப்புதலைக் கோரினார்கள். அதற்கு  சம்மதமும் கிடைத்தது. ஆயினும் இவை அனைத்தும் மிக குறுகிய காலத்திலேயே மீறப்பட்டன. இதன் மூலம் வெளிப்படுவது யாதெனில், மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தம் தொடர்ச்சியாக மீறப்படும்போது போராட்டங்கள் வெடிக்கும் என்பதாகும். சுதந்திரத்திற்கு பின்னர் இந்நிலை தொடர்வதனை நாம் காண முடியும். 

இதன் மூலம் வெளிப்படுவது யாதெனில், ஜனநாயக நடைமுறைகளுக்கு உட்பட்டு ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றும் அரசியல் தலைவர்கள் காலவோட்டத்தில் ஜனநாயகத்தின் அடிப்படை பெருமானங்களை சீர்குலைக்கும் வகையில் அல்லது அழிக்கும் வகையில் செயற்படுவது இலங்கையில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளில்  காணப்படுகின்றது என்பதில் வியப்பில்லை. 

இதற்கு அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி, ஹங்கேரியில் விக்டர் ஓபனின் ஆட்சி, பிரேஸிலின் பொல்சொனாரோவின் ஆட்சி, இந்தியாவில் மோடியின் ஆட்சி, பிலிபைன்ஸில் ரொட்ரிகோ துதெர்த்தே, ரஷ்யாவில் பூட்டினின் ஆட்சி என்று இந்தப்பட்டியல் நீண்டு செல்கின்றது. இவர்கள் அனைவரும் ஜனரஞ்சக அரசியல் தலைவர்கள் என்பது ஒருபுறமிருக்க, ஜனநாயக ஆட்சியின் அடிப்படை விழுமியங்களை மிக மோசமான விழ்ச்சிக்கு கொண்டு சென்றவர்கள். 

ஆட்சி அதிகாரத்தினை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல துணிச்சல் கொண்ட தலைவர்கள் இவர்கள். இப்போக்கினை 2018ம் ஆண்டு வெளிவந்த இரண்டு முக்கியமான நூல்கள் எடுத்துக்காட்டின. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பேராசிரியர்களான ஸ்டிவன் லெவிட்ஸ்கி மற்றும் டேனியல் ஸிப்லெட் ஆகியோர் எழுதிய ‘ஜனநாயம் எவ்வாறு மரனிக்கின்றது’ என்ற நூலும், கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற அரசியல் விஞ்ஞான பேராசிரியரான டேவிட் ரன்சிமன் எழுதிய ‘ஜனநாயகம் எவ்வாறு முற்றுப்பெறுகின்றது’ என்ற நூலும் மேற்கூறிய விடயங்களை விவாதிக்கின்றன. 

போராட்டங்கள் வெளிப்படுத்தும் முக்கியப் பண்புகள்

இன்றைய போராட்டங்கள் பல முக்கியமான விடயங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. அந்தவகையில், மரபு ரீதியான அரசியல் தலைமைத்துவம் மீதான அவநம்பிக்கை, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீதான அதிருப்தி, ஊழல் மோசடிகள் நிறைந்த அரசியல் கலாசாரம் மீதான விரக்தி போன்ற பல விடயங்களை அவதானிக்க முடியும். இன்று அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, அரசியல் கட்சிகளும் முற்றாகவே நம்பிக்கையை இழந்துள்ளன. 

ஆகவேதான் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீடு செல்ல வேண்டும் என்ற  கோ~ம் எழுச்சி பெற்றுள்ளது. அரசாட்சியில் பொதுமக்களின் நம்பிக்கை என்பது அடிப்படையானதாகும். அந்த நம்பிக்கையே ஆட்சியாளர்கள் தமது கொள்கைகளை, சட்டங்களை மற்றும் ஏனைய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட தன்மையினை (Legitimacy) வழங்குகின்றது என்பதனை மனம்கொள்ள வேண்டும்.

சுமார் 85சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்ற விடயத்தினை அண்மையில் கொழும்பில்  அமைந்துள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேற்கொண்ட ஆய்வில்  குறிப்பிட்டிருந்தனர். இது மரபு ரீதியான அரசியல்  தலைமைகள் மீதான இன்றைய தலைமுறையினரின் உச்சகட்ட அவநம்பிக்கையினையும், புதிய அரசியல்  கலாசாரம் ஒன்றிற்கான தேவையினையும் குறித்து நிற்கின்றது.

இதன் காரணமாகவே இந்தப் போராட்டங்கள்  எந்த ஒரு அரசியல் தலைமைத்துவமும், பின்னணியும் இல்லாமல் இடம்பெறுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ‘நாம் யாவரும் தலைவர்கள்’ என்ற  செய்தியினை வழங்குகின்றார்கள். இவை சாதானமான செய்தியாக தென்படலாம் -ஆனால், இவற்றில் ஆழமான அர்த்தத்தினைக் கொண்டுள்ளன. 

போராட்டத்தை நடத்துவதற்கு மரபுரீதியாக நாம் பார்க்கும் தலைமைத்துவம் அவசியம் இல்லை என்பதனை  இந்தப் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. முறையான தலைமைத்துவம் அல்லது அரசியல் பின்புலம் இல்லாமல்  இப்போராட்டங்கள் இடம்பெறுவதால் இதனைப் பலரும் கேலி செய்தார்கள். இளைஞர்களின் பொழுதுபோக்குக்கான களமாக காலிமுகத்திடலை விமர்சித்தார்கள். 

உணவு, குடிநீர் மற்றும் ஏனைய வசதிகள் இல்லாமல் போகும் போது சுயமாகவே கலைந்து செல்வார்கள் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். கடந்த காலங்களில் இலங்கையில் அவ்வப்போது இடம்பெற்ற போராட்டங்களில் ஒன்றாக இதனைப் பார்த்தார்கள். போராட்டத்தினை குழப்பவதற்கு அரச தரப்பினரால் பல முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன – அவை தொடர்கின்றன. ஆயினும் அவை யாவற்றையும் போராட்டக்காரர்கள் வெற்றிகரமாக முறியடித்து போராடி வருகின்றார்கள். 

இதன் காரணமாக இந்தப் போராட்டங்கள் மீதும், அதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மீதும் பெரும் நம்பிக்கை, மரியாதை மற்றும் ஏற்புடைமை  அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக பல்வேறு  பின்புலங்களைக் கொண்டவர்கள்  இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருவதனை  காணமுடிகின்றது. அதில் உணவு அடிப்படை வசதிகள் என்பனவும்  அடங்கும். இவை இந்தப் போராட்டத்தினை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அரசியல் கலப்பற்ற போராட்டமாக இது தொடர்வதற்கு பிறிதொரு காரணமுண்டு. அதுவே அரசியல்வாதிகள் தலையிட்டால் ஒட்டுமொத்த போராட்டத்தினையும் தமது நலன்களுக்காக திசை திருப்பி விடுவார்கள் என்ற அச்சம் இளைஞர்கள் மத்தியில் நிலவுகின்றது. எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாது ஒரு மாதகாலத்திற்கு  மேலாக  பல தடைகளைத் தாண்டி இடம்பெறும் போராட்டம் இது என குறிப்பிடலாம். இது மக்கள் போராட்டத்திற்கான புதிய கலாசாரத்தை வழங்கியுள்ளது. மக்களே தலைவர்கள் என்ற செய்தியினை மீள நினைவூட்டுகின்றது. 

இப்போராட்டங்களில் காணக்கூடிய பிரதொரு விடயம் யாதெனில், தகவல் தொழிநுட்பத்தினையும் டிஜிட்டல் ஊடகங்களையும் வினைத்திறன் மிக்க வகையில் கையாள்வதாகும். பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் ஏனைய அச்சுறுத்தல்களை போராட்டக்காரர்கள் வெற்றிகரமாக முறியடித்து வருவதற்கு இவை பெரியளவிலான பங்களிப்பினை வழங்கி வருகின்றன என்பதில் ஐயமில்லை.  

தொடரும்

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா. ரமேஷ்,
அரசியல் விஞ்ஞானத்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்