(என்.வீ.ஏ.)

கொல்கத்தா, ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (24) இரவு நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான முதலாவது தகுதிகாண் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை 7 விக்கெட்களால் வெற்றிகொண்டதன் மூலம் இறுதிப் போட்டியில் விளையாட குஜராத் டைட்டன்ஸ் தகுதிபெற்றது.

Hardik Pandya and Sanju Samson pose with the IPL trophy ahead of Qualifier 1, Gujarat Titans vs Rajasthan Royals, IPL 2022, Qualifier 1, Kolkata, May 24, 2022

ராஜஸ்தான் றோயல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 189 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ், டேவிட் மில்லர், அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 19.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

ட்ரென்ட் போல்ட் வீசிய முதலாவது பந்திலேயே ஆரம்ப வீரர் ரிதிமான் சஹா ஆட்டமிழந்தது குஜராத் டைட்டன்ஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஆனால், அதன் பின்னர் குஜராத் டைட்டன்ஸ் துடுப்பாட்ட வீரர்கள் எதிரணி பந்துவீச்சாளர்களை பதம் பார்த்ததுடன் ஷுப்மான் கில், மெத்யூ வேட் ஆகிய இருவரும் பவர் ப்ளே நிறைவில் 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

Hardik Pandya celebrates the wicket of Devdutt Padikkal, Gujarat Titans vs Rajasthan Royals, IPL 2022, Qualifier 1, Kolkata, May 24, 2022

அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷுப்மான் கில் (35) அநாவசியமாக 2ஆவது ஓட்டத்துக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 13 ஓட்டங்கள் சேர்ந்தபோது மெக்கோய் வீசிய பந்தை விசிறி அடித்த மெத்யூ வேட் (35), பவுண்டறி எல்லையில் ஜொஸ் பட்லரிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்த குஜராத் டைட்டன்ஸ் அடுத்த 3 ஓவர்களில் 17 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் நெருக்கடியைக் கொடுத்தது.

Hardik Pandya leads Gujarat Titans out for Qualifier 1, Gujarat Titans vs Rajasthan Royals, IPL 2022, Qualifier 1, Kolkata, May 24, 2022

எவ்வாறாயினும், ஹார்திக் பாண்டியாவும் டேவிட் மில்லரும் துணிச்சலுடன் சிறந்த துடுப்பாட்ட வியூக முறையைப் பிரயோகித்து அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தவண்ணம் இருந்தனர்.

கடைசி 5 ஓவர்களில் குஜராத்தின் வெற்றிக்கு மேலும் 50 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அடுத்த 4 ஓவர்களில் முறையே 7, 9, 11, 7 என ஓட்டங்கள் பெறப்பட கடைசி ஓவரில் வெற்றிக்கு மேலும் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

R Sai Kishore roars after snagging Sanju Samson, Gujarat Titans vs Rajasthan Royals, IPL 2022, Qualifier 1, Kolkata, May 24, 2022

ப்ராசித் க்ரிஷ்ணா வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளை சிக்ஸ்களாக விளாசிய டேவிட் மில்லர், குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைவதை உறுதிசெய்தார்.

டேவிட் மில்லரின் இந்த அசாத்திய திறமை, இதே மைதானத்தில் 2016இல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கார்லோஸ் ப்றத்வெய்ட் 4 சிச்கர்களை விளாசி மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிபெறச் செய்ததை நினைவுபடுத்தியது.

டேவிட் மில்லரும் ஹார்திக் பாண்டியாவும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

David Miller hit a 35-ball fifty, Gujarat Titans vs Rajasthan Royals, IPL 2022, Qualifier 1, Kolkata, May 24, 2022

மில்லர் 38 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 68 ஓட்டங்களுடனும் ஹார்திக் பாண்டியா 27 பந்துகளில் 5 பவுண்டறிகள் அடங்கலாக 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

2ஆவது ஓவரில் யாஷ் தயாளின் கடைசிப் பந்தில் யஷஸ்வி ஜய்ஸ்வால் (3), ரிதிமான் சஹாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் றோயல்ஸ் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

Devdutt Padikkal goes aerial, Gujarat Titans vs Rajasthan Royals, IPL 2022, Qualifier 1, Kolkata, May 24, 2022

ஆனால், ஜொஸ் பட்லருடன் இணைந்த அணித் தலைவர் சஞ்சு செம்சன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தார். சஞ்சு செம்சன் 26 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களை விளாசி 47 ஓட்டங்களைப் பெற்றார்.

தேவ்தத் படிக்கல், துடுப்பாட்டததை சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால், ஜொஸ் பட்லர் தனி ஒருவராக ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி அணிக்கு தெம்பூட்டிக்கொண்டிருந்தார்.

4 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற ஷிம்ரன் ஹெட்மயருடன் ஜொஸ் பட்லர் 4ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜொஸ் பட்லர் 56 பந்துகளில் 12 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார். அவர் 90ஆவது ஓட்டத்தைப் பெற முயற்சித்தபோது ரன் அவுட் ஆனார்.

பந்துவீச்சில் மொஹமத் ஷமி, யாஷ் தயாள், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.