இலங்கைக்கு எதிராக முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தில் 365 ஓட்டங்களை குவித்த பங்களாதேஷ் 

Published By: Digital Desk 4

24 May, 2022 | 10:52 PM
image

(என்.வீ.ஏ.)

இலங்கைக்கு எதிராக டாக்காவில் நடைபெற்றுவரும் 2ஆவதும் கடைசியுமான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு இணைப்பாட்டத்தின் உதவியுடன் பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 365 ஓட்டங்களைப் பெற்றது.

Dimuth Karunaratne raised his half-century in the last session, Bangladesh vs Sri Lanka, 2nd Test, Mirpur, Day 2, May 24, 2022

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கைக்கு, ஓஷத பெர்னாண்டோ, திமுத் கருணராட்ன ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுக்க, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரம்   இரட்டை இலக்க எண்ணிக்கைகளைக் கடந்ததுடன் அவர்களில் முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் மூன்றிலக்க எண்ணிக்கைகளைக் குவித்தனர்.

அவர்கள் இருவரும் பகிர்ந்த 272 ஓட்டங்கள் டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷின் 6ஆவது விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாக அமைந்தது.

அத்தடன் சகல விக்கெட்களுக்குமான 3ஆவது அதிகூடிய இணைப்பாட்டமாகவும் அது பதிவானது.

இந்த இணைப்பாட்டம் முடிவுக்கு வந்ததுடன் கடைசி 5 விக்கெட்கள் 69 ஓட்டங்களுக்கு சரிந்தன.

போட்டியின் 2ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் 365 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் 6 விக்கெட்டில் 272 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லிட்டன் தாஸ் 141 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 246 பந்துகளை எதிர்கொண்ட அவர் 16 பவுண்டறிகளையும் ஒரு சிக்சையும் அடித்தார்.

355 பந்துகளை எதிர்கொண்ட முஷ்பிக்குர் ரஹிம் 21 பவுண்டறிகளுடன் 175 ஒட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காதிருந்தார். முஷ்பிக்குர் ரஹிம் முதலாவது டெஸ்ட் போட்டியிலும் சதம் குவித்திருந்தார்.

இவர்கள் இருவரை விட தய்ஜுல் இஸ்லாம் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

மிகத் திறமையாக பந்துவீசிய கசுன் ராஜித்த 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியைப் பதிவுசெய்தார்.

Mushfiqur Rahim remained unbeaten on 175 as Bangladesh were bowled out for 365, Bangladesh vs Sri Lanka, 2nd Test, Mirpur, Day 2, May 24, 2022

கசுன் ராஜித்தவைப் போன்றே அசித் பெர்னாண்டோவும் அதிசிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறதியை பதிவு செய்தார். அவர் 93 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் நாள் ஆட்டத்தின்போது நெஞ்சு வலியால் அசௌகரித்துக்குள்ளாகி டாக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குசல் மெண்டிஸ் வைத்தியசாலையிலிருந்து திரும்பி இன்றைய ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடினார்.

ஓஷத பெர்னாண்டோவும் திமுத் கருணாரட்னவும்   முதல் விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.  

ஓஷத பெர்னாண்டோ 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் களம் புகுந்த குசல் மெண்டிஸ் 2ஆவது விக்கெட்டில் திமுத் கருணாரட்னவுடன் 45 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

திமுத் கருணாரட்ன மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 127 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

இராக்காப்பாளனாக களம் புகுந்த கசுன் ராஜித்த    ஓட்டம் பெறாமல் உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்