( எம்.எப்.எம்.பஸீர்)

 கொழும்பு நகருக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும், நிரந்தர வீதித் தடைகளை  அகற்றுமாறு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

கொழும்புக்குள் பிரவேசிக்கும் பல வீதிகளில் நிரந்தர வீதித் தடைகள்  அமைக்கப்பட்டுள்ளன. (புகைப்படங்கள்) - Kandy Time News

சுற்றுச் சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள இந்த மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் ஜூன் 22 ஆம்  திகதி நடக்கும் என உயர் நீதிமன்றம், இன்று ( 24) மனுவை ஆராய்ந்து அறிவித்தது.

உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ தலைமையிலான  குமுதினி விக்ரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன  ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள்  குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

கம்பஹாவைச் சேர்ந்த  ஊடகவியலாளர்  ஷெனால் ஜயசேகரவும்  சுற்றுச் சூழல் நீதிக்கான மையமும் இணைந்து தாக்கல் செய்துள்ள இந்த  மனுவில் பிரதிவாதிகளாக  பொலிஸ்  மா அதிபர்,  கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ்  நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிகள்,  வீதி அபிவிருத்தி அதிகார சபை,  மனித உரிமைகள் ஆணைக் குழு மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பொலிஸார்,  கொழும்பு கொள்ளுப்பிட்டி  அலரிமாளிகை மற்றும்  கோட்டை  பகுதிகளில் அமைத்துள்ள நிரந்தர வீதித் தடைகள்  காரணமாக பொது மக்களின்  சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை  மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்கடடியுள்ளனர்.

 அதனால் மனுவை விசாரணைக்கு ஏற்று, நிரந்தர வீதித் தடைகள் காரணமாக மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவித்து, அவற்றை அகற்ற பொலிஸ்  மா அதிபருக்கு உத்தரவிடுமாறு  மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

 மனுதாரர்களுக்காக,  சட்டத்தரணி  கிரிஷ்மால் வர்ணசூரிய மற்றும்  ரவீந்ரநாத் தாபரே ஆகியோர் ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது.