இன மத மொழி பேதமின்றி எல்லோரும் ஒன்றிணைந்து மனிதன் எனும் கோட்பாடுடன் நாம் எல்லோரும் வாழ்வோம். இலங்கைத் தீவின் பல்லின மக்கள் இங்கு பிறந்து வாழும் நாட்டில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கான ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளோம்.

இப்பிரச்சினை காலகாலமாக தீர்க்கப்படாமல் எல்லாமே சீர்கெட்டு, அரசியல் பொருளாதார பல்வேறுபட்ட நெருக்கடிக்குள் சிக்குண்டு செய்வதறியாமல் மக்கள் திண்டாடுகின்றனர். ஆளும் ஆட்சியாளர்கள் இதற்கான பொறுப்புதாரிகளாகவே இருப்பதும் அதற்கான உத்தரவாதங்களும் இல்லாத போக்குமாக நாம் காண்கின்றோம்.

இன மத மொழி பேதங்களுக்கும் அப்பாலும் மனித வாழ்வாதாரங்களுடன் வாழ முடியாத மக்களின் வரலாறு காணாத பல இன்னல்களையும் நாம் எல்லோரும் அனுபவித்து வருகின்றோம்.

ஒரு இனத்தின் மீது அவர்களுடைய சமூக அமைப்பை சீர்கெடச் செய்யும் மிக மோசமான செயல்களிலும் அவர்களுடைய மதங்களையும் துன்புறுத்துவதோடு மத வெறி, இன வெறிகளை தூண்டும் வார்த்தை பிரயோகங்களையும் பிரயோகித்து இனங்களுக்கிடையிலான கலவரங்களையும் குறிவைத்து தாக்கும் அழிவுகளையும் ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் பிரிந்து நிலை தடுமாறி உள்ளனர். இதனால் நிம்மதி இழந்து செய்வதறியாமல் நிலை குலைந்து போவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. இது காலா காலமாக நடந்தேறி வருகின்றது. இந்த அனுமதியற்ற சூழல் இனி மாற வேண்டும்.

இலங்கைத் தீவு இயற்கையில் மிகவும் அழகான நாடு. எல்லா வகையான வளங்களும், நிறைந்த சோபமான பூமி என எல்லோரும் போற்றுகின்றனர். ஆனால் இது மோசமான பூமியாக மாறி வருகிறது.

மக்கள் வாழ முடியாத சூழ்நிலைக்குள் தள்ளப்படும் போது மக்கள் எழுச்சி போராட்டங்களாக மாற்றமடைகின்றன. எல்லா போராட்டங்களும் மக்களின் தேவைகளைத்தான் முன்னிறுத்துகிறது. பெரும்பான்மையினர்களின் போராட்டங்கள், தமிழர்களின் போராட்டங்கள் எல்லாமே நியாயமானதுதான். அவைகளை கையாளும் முறைகளில் ஏற்படும் தவறுகளினால், மனிதர்களின் வாழ்வாதாரங்களும் இழந்து அவர்கள் நிர்க்கதிக்குள்ளாக்கின்றனர். உள்நாட்டு சர்வதேச பின்புலன்களும் இதில் தாக்கம் செலுத்துவதையும் அறிய முடிகிறது.

எங்களுடைய இனமத கோட்பாடுகள் எங்களோடு உங்களுடைய இன மத கோட்பாடுகள் உங்களோடு நாம் எல்லோரும் மனிதன் என்ற சமத்துவ அடிப்படையில் சேர்ந்து வாழவேண்டும். இதுதான் நியாயமும், தர்மமும், எல்லா மத போதனைகளும் அதைத்தான் புகட்டுகிறது. கூறுகின்றது.

பல்லின மொழிக்கலாச்சாரத்தில் சிங்களம், தமிழ், அறபு மொழி வாசகங்களும் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

மொழி என்பது, ஒரு பிரச்சினையாக பார்க்க முடியாது. மொழி இல்லை என்றால் உலகம் சமநிலை அடையாது. மொழி என்பது மனிதர்களுக்கிடையில் ஒரு இணைப்புத்தான். நாம் பேசுகின்ற வார்த்தைகள், "பாஷை"ஒருத்தரை ஒருத்தர் புரிந்து செயற்படுவதற்கு தான்  உடல் மொழியிலிருந்து  வெளிப்படும் பேச்சுக்களை நாம் உணர்ந்து அறிந்து செயற்படுவதற்கே. 

இதை ஏன் வெறுப்புடன் பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் மொழி மிக மிக முக்கியத்துவமானது. அதன் அடிப்படைத் தன்மையாகவும், அமைந்துள்ளது. நாம் எல்லோரும் அதை அலட்டிக் கொள்ள தேவையில்லை. மாறாக ஒரு மொழி பேசுபவர்களை அந்நிய நாட்டவர் என கருதவும் முடியாது. மக்கள் மக்களாக வாழ்வதற்கு மொழி முதன்மையானது. இது உலகத்தில் உள்ள எல்லோருக்கும் பொதுவான நியதிகளாகும்.

எந்த மொழியை கற்றுக்கொள்ள விரும்புகின்றீர்களோ அதை கற்றுக் கொள்ளுங்கள். இது ஒரு திணிப்பு அல்ல. பல்வேறுபட்ட இனத்தவர்களுடனும் பல்வேறுபட்ட திறமைகளையும் சக்திகளையும் இறைவன் (கடவுள்) கொடுத்துள்ளான். மேலதிகமாக இன்னுமொரு மொழி தெரிந்திருந்தால் நம் அன்றாட தொழிலுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அது மேலும் உதவும்.

ஒரு சமூகம் ஒரு நில புலத்தில் நீண்ட காலமாக வாழ்வார்களானால் அவர்களும் அந்நாட்டு பிரஜைகள்தான். அந்த இனக் குழுக்களுக்குரிய சகல சௌபாக்கியங்களும் சக வாழ்வுக்குரிய போதிய அளவு அனுபவிக்கும் உரிமைகளும் சலுகைகளும் உண்டு. அதுதான் ஒரு ஜனநாயக நாடாக இருக்க முடியும்.

ஒரு இனத்தின் சமய வழிபாடுகள், வாழ்விடங்கள் இன்னோரன்ன அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவைகள் எல்லாமே உத்தரவாதப்படுத்தப்படாத நகர்வைத்தான் இதை மக்கள் சிர் செய்ய வேண்டுமென அந்நாட்டு அரசுடன் அகிம்சையான போராட்டங்கள் மூலம் மக்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதை நிவர்த்தி செய்வதைத்தான் மனித இனம் விரும்புகின்றது. ஆனால் மனிதன் மனிதனாக வாழ முடியாத போக்கைத்தான் இலங்கையிலும் உலகிலும் காணப்படுவதுடன் அதிகார போட்டித்தன்மைகளும் ஒரு இன மேலாதிக்கம் எல்லாமே மாற்றமடைய வேண்டும்.

நிரந்தரத் தீர்வுகள் எட்டாத வரைக்கும் அழிவுப்பாதையில்தான் செல்வதை நாம் கண்டு அனுபவிக்கின்றோம். தீர்வுகளும் சட்டங்களும் மக்களுக்காகவே தான் மக்களாக மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டதே அது நடைமுறையில் இருப்பதை நாம் காண்கின்றோம்.

அரசியலமைப்பு சட்டங்கள் மறுபரிசீலனைகள் செய்யவேண்டும் என்றுதான் அரசியல் வாதிகளுக்கும் அப்பாலும் மற்றும் பலராலும் பல்வேறுபட்ட முன்மொழிவுகள் (நகர்வுகள்) கடந்த காலங்களிலும் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.. 

அவைகள் ஒன்றுமே தீர்வைத் தரவில்லை. என்றால் அப்படியானால் வேறு எவ்வகையான தீர்வுதான் சரியாக இருக்கும் என்று சற்று சிந்திக்க வேண்டிய விடயம் இந்த சிக்கல் முடிச்சில் எங்கேயோ தவறு இருக்கிறது. என மேலும், மேலும் சிந்திக்க தூண்டுகிறது. ஆனால் ஆட்சியாளர்கள் மேலும் காலத்தினை கடத்தும் போக்காகத்தான் அரசியலுக்கும் அப்பாலும் கடந்த கால வரலாறுகளும் நாம் எல்லோரும் காண முடிகிறது. "பிச்சைக்காரனின் புண்போல்"நம் நாட்டு இனப்பிரச்சினையும் அரசியல் நகர்வுகளும் அதன் போக்கையும் காண்கின்றோம். பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கம் இல்லை போல் அதை வைத்துக் கொண்டு அரசியல் செய்து காலத்தினை எட்டுகின்றனர் என சுட்டிக்காட்டத்தோன்றுகின்து.

இலங்கை சுதந்திரம் கிடைத்ததிலிருந்து அரசியலமைப்பு திருத்த சட்டங்கள் காலத்துக்கு காலம் ஆளும் தரப்புக்களால் அதை மாற்றி திருத்தப்பட்டாலும் அது ஒரு திணிப்பு அடிப்படையில் தான் அரங்கேறியுள்ளதாக கருதவும் முடிகிறது. தற்போது 19வது திருத்தச் சட்டத்தை மீள அமுலாக்கம் செய்ய ஜனாதிபதியும் சம்மதித்த தீர்மானம் பேசப்படுவது போல் இதற்கு முன்னர் 20வது திருத்தம், 21வது திருத்தம் இன்னும் எத்தனையோ திருத்தச் சட்டங்களை வெளிப்படையாக மக்களுக்கு சொல்லுவார்களா? அதில் என்ன உள்ளதென்பது சட்டம் மக்களுக்கா? அல்லது ஆளும் ஆட்சியாளர்களுக்கா? 

இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் மாறிமாறி பெரும்பான்மையினர்தான் ஆட்சி அமைக்கும் நடைமுறையாக இருக்கும். இதில் எவ்வித சந்தேகங்களும் இல்லைதான். 

சிறுபான்மை சமூகத்தினர்களும் இணைந்த ஒரு சமூகமாக இலங்கை நாட்டின் ஒருதாய் வீட்டுப் பிள்ளைகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வழியமைத்து கொடுக்க வேண்டிய கடப்பாடும் நாட்டை ஆளுபவர்களின் பொறுப்புமாகும்.

நாடும், நாட்டு மக்களும் சுபீட்சம், சௌபாக்கியத்துடனும் வாழ வேண்டுமானால், "இனப்பிரச்சினை" எனும் அடைமொழி உட்பூசலை அதன் உள்ளார்ந்த வெளிப்படைத் தன்மையினை மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். இதுதான் இன்றைய தேவையாரும்; ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை தன்மையினை உறுதி செய்யும் இது அவசியமாகும். இங்கு யார் சொல்லுகிறார்கள் என்பதை விட மக்களால் முன்வைக்கும் கருத்துக்கள் தான் அதில் எது சரியெனில் அதைச் செய்வது தான். இதற்கு தராதரம், வயது எதுவுமில்லை.

கருத்து சுதந்திரங்கள் நியாயமானதாக இருப்பதை சகிப்புத்தன்மை விட்டுக் கொடுப்புடன் அவைகளையும் அரவணைத்து மாறாக அதை ஒரு குற்றமாக கருதாது, மேலும் மக்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். 

ஒரு இடத்தில் குவிந்திருக்கும் அதிகாரங்களை தவிர்த்து அதிகாரப் பகிர்வு மேலும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்றம், மாகாண சபைகள், மாவட்டங்களுக்கு என்று நிர்வாக கட்டமைப்பையும் விஸ்தரித்து பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதில் பாதுகாப்பு ஏனைய முக்கிய பொறுப்புக்கள் மத்திய அரசின் கீழ் இருப்பது போல், இலங்கைத் தீவின் ஒன்பது (09) மாகாணங்கள் உள்ளன. அவற்றில் வாழும் இனக்குழு மக்களின் அவர் அவர்களுடைய விகிதாசார அடிப்படையில் பெரும்பான்மையாக வாழும் அந்தந்த பகுதி மக்களின் பிரதிநிதிகள் அந்தந்த மாகாணத்தை ஆளுதல் அவற்றில் ஏனைய குழுக்களின் பிரதிநிதிகளும் முறையாக இருக்கத்தக்கதாக அமையப்படல்வேண்டும், 

வட மாகாணத்தை தமிழ் மக்களில் ஆளுமையின் கீழ் ஆழப்படுவதில் ஏனைய இனக்குழு பிரதிநிதிகளும் விகிதாசார முறையில் இணைந்து இருப்பது செயல்படுவது போல் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் அமைப்புகளும் முறையாக ஏனையவர்களும் இருப்பர். இது ஒரு சிறந்த நிரந்தர தீர்வாக அமைய முடியும். இதை விட ஒரு நல்ல தீர்வு இருந்தால் மக்கள் மத்தியில் வெளிப்படையாகச் சொல்லுங்கள். நம் நாட்டுப் பிரச்சினை இங்கு வசிப்பவர்களுக்கு தான் தெரியும் மாறாக ஒஸ்லோ வரை நீண்டு செல்லத் தேவையில்லை. இதனால் காலம்தான் கடந்து செல்கிறது. ஆனபலன் எதுவுமில்லை. "கலிபதுல் ஹல்லாஜ்" கூற்றுப்போல் அறிவெல்லாம் பூச்சியமானது.

உணவு அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு தொழில்பாதிப்பு என பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலைமை காரணமாக மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும். அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. அப்படியானால் அதிகாரப்பகிர்வு ஊடாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதனால் நாட்டின் ஸ்திரத்தன்மைகள் உருவாகும் எனும் நம்பிக்கைகள் மேலே கூறப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் முற்றாக தீர்க்கப்படுமானால் இலங்கையின் "நிறைவேற்று ஜனாதிபதி முறை" அதன் சட்டத்திலிருந்து நீக்கிவிடலாம். இம்முறைமை அடக்கியாளும் ஆதிக்க முறை திட்டமாக கருதுதவும் மேலும் சிந்திருக்கவும் தூண்டுகிறது.

1978ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு அது கொண்டுவரப்பட்டது. கடந்த 44 ஆண்டுகளாக இன்று வரை செயல்படுகிறது. ஆனால் இச்சட்டத்தின் பலன் மக்களுக்கு முழுமையான பலன் சென்றடைந்ததா? இல்லை என்றுதான் பதில்வரும். இன்றுவரை இதனால் பல இன்னல்களுக்குள் மக்கள் சிக்குண்டு கஷ்டப்படுகின்றனர். எனவே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் அரசியல் செய்ய இயலாத நிலைப்பாடாக அதன் நிலைமை காணப்படுகிறது இதனை மாற்ற வேண்டும் என்றுதான் மக்கள் கூறுகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நெருக்கடிகளின் பயனாக மக்கள் எழுச்சி கடந்த ஒரு மாத காலமாக நடந்து  கடந்த 2022.05.09ஆம் திகதியிலிருந்து இலங்கையில் ஆட்சி  மாற்றம் ஏற்படுகிறது. இம்மாற்றத்தினால் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழி அமைக்குமா? என்பதும் மற்றுமொரு கேள்விக்குறிதான்.

சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அதன் ஸ்திரத்தன்மையின்மையான கள நிலைமைகள் தென்படுகிறது. இதன் பின்னணியில் சர்வதேச நாடுகளின் உறவுகளிலும் பல்வேறுபட்ட உறவு முறைகளைப் பேணி பாதுகாத்து கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடும் இலங்கைத் தீவுக்கு அவசியமாக இருக்கின்றது. பிராந்திய சர்வதேச உறவுகளிலும் ராஜதந்திர பொறிமுறைகைள கடைப்பிடிக்கும் அவசியம் குறிப்பாக தெற்காசிய நாடுகளுடனான ஒத்துழைப்புகளைப் பேசுவோம். மேலும், அரசியலுக்கு அப்பால் உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதார முன்னெடுப்புகளையும் மாற்றங்களையும் பற்றி நாம் எல்லோரும் நலம் பெறும் ஆலோசனைகளை முன்வைத்துப் உரையாடுவோம். 

றசாக் முகம்மட் அலி
அஸ்ரப் ஞாபகார்த்த நூலகம்,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்