(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா றக்பி (இலங்கை றக்பி நிறுவனம்) தடைசெய்யப்பட்ட பின்னர் ஆசிய றக்பி சம்மேளனத் தலைவரும் இலங்கை தேசிய ஒலிம்பிக் தலைவரும் துபாயில் அண்மையில் சந்தித்துக்கொண்டபோதே காய்ஸ் அல் தலாய் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

ஆசிய றக்பி சம்மேளனத் தலைவர் காய்ஸ் அல் தலாயுடனான சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம்,

'ஆசிய றக்பி தலைவரை சந்திக்க கிடைத்ததையிட்டு நான் பெருமை அடைகின்றேன். தனிபட்ட நபர்களை விட விளையாட்டுத்துறை உயர்ந்தது என்பதை ஆசிய றக்பி தலைவர் உறுதிபட கூறினார்.

அவருடனான சந்திப்பின் பலனாக, இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கை றக்பிக்கும் அதன் விளையாட்டு வீரர்களுக்கும் ஆசிய றக்பி ஆதரவளிப்பது உறுதியாகியுள்ளது.

குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இருபாலாருக்குமான றக்பி போட்டிகளில் இலங்கையைப் பங்குபற்றச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதி அளித்தார்' என்றார்.

'ஸ்ரீலங்கா றக்பி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை மிக விரைவில் நீக்கப்படும் என ஆசிய றக்பி தலைவர் ஆவலுடன் காத்திருக்கிறார்' என தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஆசிய றக்பி காத்திருக்கிறது. நிருவாக விவகாரங்கள் தொடர்பான விடயங்களால் வீரர்கள் பாதிக்கப்படக்கூடாது என ஆசிய றக்பி கருதுகிறது.

இந்த சந்திப்பின் பின்னர் பேசிய காய்ஸ் அல் தலாய், 'எனது சகாவான சுரேஷை அவரது இரண்டாவது வீடான ஐக்கிய அரபு இராச்சியத்தில் வரவேற்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஒவ்வொரு விளையாட்டு செயற்பாடுகளிலும் வீரர்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என நாங்கள் இருவரும் நம்புகின்றோம்.

விளையாட்டு வீரர்களுக்கு சேவை செய்யவே விளையாட்டுத்துறை நிருவாகிகளாக நாங்கள் இருக்கிறோம். அதேவேளை, எங்களது விளையாட்டுத்துறை எத்தகைய நிருவாக முரண்பாடுகளும் இல்லாமல் தூய்மையாக இருப்பதை உறுதிசெய்வோம்' என்றார்.

'இலங்கை அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டவுடன், ஆசிய றக்பி சம்மேளனத்தின் சங்கம் மற்றும் விதிமுறைகளக்கான கட்டளைக்கு  அமைய பிராந்திய சங்க அங்கத்துவத்தில் ஸ்ரீலங்கா றக்பி மீண்டும் இணைக்கப்படும்' எனவும் அல் தலாய் குறிப்பிட்டார்.