தேவையேற்படின் இருவாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தம் - வலுசக்தி அமைச்சர் காஞ்சன 

Published By: Vishnu

24 May, 2022 | 08:02 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப இரு வாரங்களுக்கொருமுறை அல்லது மாத்திற்கொருமுறை விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றில் 1 ரூபாய் நஷ்டத்தினையும் , ஒட்டோ டீசலொன்றில் 60 சதம் நஷ்டத்தினையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடையும் போதும் , டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும் போது விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் மூலம் கிடைக்கப் பெறும் இலாபத்தின் பயன் மக்களையும் சென்றடையும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஐ.ஓ.சி. மற்றும் சிபெட்கோ ஆகிய இரு நிறுவனங்களதும் விலைகள் சமாந்தரமாக அமைய வேண்டும் என்பதற்காக விலை சூத்திரமொன்றை பேணுவதற்கான அவசியம் தொடர்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவித்திருந்தோம்.

அதற்கமைய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட விலை சூத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை சூத்திரத்தில் 6 செலவீனக்கூறுகள் உள்ளடங்குகின்றன. இவற்றில் இரு செலவீனக்கூறுகளை மாத்திரம் தவிர்த்து எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விலை அதிகரிப்பிற்கு முன்னர் எரிபொருளுக்கான இறக்குமதி செலவு மற்றும் விநியோகம் வரையிலான செலவுகளை மதிப்பிடும் போது 92 ரக பெற்றோல் லீற்றரொன்றுக்கு 421.21 ரூபாவாகக் காணப்பட்டது.

இதன் போது இதன் விலை 338 ரூபாவாகக் காணப்பட்டது. அதற்கமைய 83.71 ரூபா நஷ்டம் காணப்பட்டது. எனவே தான் 82 ரூபாவால் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் போதும் 1 ரூபாய் நஷ்டத்தினை எதிர்கொள்கின்றோம்.

95 ரக பெற்றோலின் விலை 373 ரூபாவாகக் காணப்பட்டது. 95 ரக பெற்றோல் லீற்றரொன்றுக்கான இறக்குமதி மற்றும் விநியோக செலவு 444 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இதன் விலையை 450 ரூபா வரை அதிகரிப்பதற்காக 77 ரூபாவால் இதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று ஒட்டோ டீசல் 289 ரூபாவாகக் காணப்பட்டது. இம்முறை இதன் விலை 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இதன் விலை 400 ரூபா வரை உயர்வடைந்துள்ளது. இதற்கான இறக்குமதி மற்றும் விநியோக செலவு 400.60 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஒட்டோ டீசலிலும் லீற்றரொன்றுக்கு 60 சதம் நஷ்டத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சுப்பர் டீசலுக்கான இறக்குமதி மற்றும் விநியோக செலவு 444.95 ரூபாவாகும். இதன் விலை 329 ரூபாவாகக் காணப்பட்டது. தற்போது 116 ரூபா என்ற விலை திருத்தத்தின் அடிப்படையில் இதன் விலை 445 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

எதிர்காலத்தில் எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இரு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை தேவைகேற்ப விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வலு மற்றும் மின்சக்தி அமைச்சு, நிதி அமைச்சு, மத்திய வங்கி, பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஐ.ஓ.சி., நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் வலு - மின்சக்தி அமைச்சின் அமைச்சரால் பரிந்துரைக்கப்படும் வேறு தரப்பினரை உள்ளடக்கியதாக அக்குழு அமைய வேண்டும் என்ற யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் , ஐ.ஓ.சி. நிறுவனம் இலாபமீட்டுவதற்கும் சிபெட்கோ நிறுவனம் நஷ்டமடைவதற்குமான காரணம் என்ன என்று பலராலும் வினப்படுகிறது.

மண்ணெண்ணெய் விநியோகத்தின் காரணமாகவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிக நஷ்டத்தினை எதிர்கொள்கிறது.

அது மாத்திரமின்றி மின்சாரசபை, புகையிரத திணைக்களம், ஸ்ரீலங்கன் எயா லைன்ஸ் மற்றும் போக்குவரத்துசபை என்பவற்றுக்கும் சேவையை வழங்குகிறது. எனினும் ஐ.ஓ.சி. நிறுவனம் இவற்றில் எதிலும் தொடர்பு கொள்ளவில்லை.

இவற்றுக்கான சேவை தொடர்ந்தும் வழங்கப்படுகின்ற போதிலும் , கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறுவதில் தாமதம் நிலவுகிறது. ஸ்ரீலங்கன்ஸ் எயார் லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து மாத்திரம் 300 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற வேண்டியுள்ளது. இவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே விருப்பமின்றியேனும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது.

டொலரைப் பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. ஜூன் மாத்திற்கு மாத்திரம் எரிபொருள் இறக்குமதி செலவிற்காக 530 மில்லியன் டொலர் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது இலங்கை ரூபாவில் 29 பில்லியன்களாகும். வெவ்வேறு காலங்களில் இந்த விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாகவே இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடையும் போதும் , டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும் போது விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருளுக்கு கிடைக்கும் இலாபம் மக்களுக்கு வழங்கப்படும்.

மேலும் மோட்டார் சைக்கிளுக்கு ஆகக் கூடியது 2500 ரூபாவிற்கும் , முச்சக்கரவண்டிகளுக்கு 3000 ரூபாவிற்கும் , ஏனைய வாகனங்களுக்கு 10 000 ரூபாவிற்கும் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அளவுக்கு அதிகமாக எரிபொருளைப் பெற்று அவற்றை களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56