நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய படத்திற்கு 'ரத்தமும் சதையும்' என பெயரிடப்பட்டிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலச்சந்தர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படத்திற்கு 'ரத்தமும் சதையும்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

இதில் விக்ரம் பிரபு கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் நடிக்கும் நடிகை, ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மை சம்பவங்களை மையப்படுத்தித் தயாராகும் இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தை கார்த்திக் மூவி ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் அட்வித் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் அண்மையில் வெளியான 'டானாக்காரன்' விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அவருடைய அடுத்த படத்தின் தலைப்பு 'ரத்தமும் சதையும்' என அறிவிக்கப்பட்டிருப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.