தாய் - மகன் இடையேயான உறவை வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்திருக்கும் 'ஜே. பேபி' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ஜே. பேபி'. இதில் தமிழ் திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகைகளும் ஒருவரும், நகைச்சுவை நடிகையுமான ஊர்வசி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவருடன் 'அட்டக்கத்தி' தினேஷ், 'லொள்ளு சபா' மாறன் ஆகியோர் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, டோனி பிரிட்டோ இசையமைத்திருக்கிறார்.

தரமான படைப்புகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமான இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

டீஸரில் தாயை தொலைத்த மகன், தாயை தேடுவதாகவும் அத்தகைய தருணங்களில் தாய் மற்றும் மகன் படும் வேதனைகள் வித்யாசமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் பாராட்டை பெற்று வருகிறது.