(என்.வீ.ஏ.)

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (23) ஆரம்பமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது நெஞ்சு வலியால் அசௌகரியத்துக்குள்ளான குசல் மெண்டிஸ், டாக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

sri Lanka's Kusal Mendis. Photo- Cricinfo

பகல் போசன இடைவேளைக்கு சற்று முன்னர் நெஞ்சு வலியினால் கஷ்டப்பட்ட குசல் மெண்டிஸ் உடனடியாக டாக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஈசிஜி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அவரது ஈசிஜி பரிசோதனை அறிக்கை நேர்மறையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குசல் மெண்டிஸின் அசௌகரியத்துக்கான காரணம் தசைப் பிடிப்பாக இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குசல் மெண்டிஸ் தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணி முகாமையாளர் மஹிந்த ஹலாங்கொட தெரிவித்தார்.

Kusal Mendis. Photo- Cricinfo

போட்டியின் 23ஆவது ஓவரின் போது கடும் அசௌகரித்துடன் காணப்பட்ட குசல் மெண்டிஸ் நெஞ்சைப் பிடித்தவாறு தரையில் சாய்ந்தார்.

இதனை அடுத்து மைதானத்துக்குள் விரைந்த மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்து அவரை ஆசுவாசப்படுத்தினர்.

அதன் பின்னர் மருத்துவக் குழுவினருடன் குசல் மெண்டிஸ் மைதானத்தைவிட்டு சென்றார்.

மெண்டிஸின் உடலில் திரவத்தன்மை குறைந்ததால் அவர் அசௌகரியத்துக்கு உள்ளாகி இருக்கலாம் எனத் தெரிவித்த டொக்டர் சௌதரி, இரைப்பை அழற்சி யும்   காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வெளியிட்டார்.